இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னை 2ம் இடம் : தரமான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னை 2ம் இடம் : தரமான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்

டெல்லி : இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதல் இடத்தையும் சென்னை 2ம் இடத்தையும் பிடித்துள்ளது. அதே நேரத்தில் தரமான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றில் வாழ்வதற்கு ஏற்ற 10 மாநில தலை நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. வாழ்க்கை தரம், பொருளாதார திறன், நிலைத்தன்மை, மக்களின் எண்ணம் என்ற 4 அளவுகோலை அடிப்படையாக கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை தரத்திற்கு 35 புள்ளிகள், பொருளாதார திறனுக்கு 15 புள்ளிகள், நிலைத்தன்மைக்கு 20 புள்ளிகள், மக்களின் எண்ணத்திற்கு 30 புள்ளிகள் என மொத்தம் 100 புள்ளிகளுக்கு அளவீடு எடுக்கப்பட்டு வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் அடிப்படையில் சராசரி கணக்கீட்டு கொடுக்கப்பட்ட விவரத்தின்படி, பெங்களூரு 66.7% பெற்று எளிதான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை 62.61% பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளது.சிம்லா, புவனேஸ்வர், மும்பை, டெல்லி, போபால் ராய்ப்பூர் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.இதே போன்று தரமான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. மக்களின் எண்ணம் குறித்த பட்டியலில் டெல்லி கடைசி இடத்தை பிடித்துள்ளது.  

மூலக்கதை