ஒரே நாளில் 10 மாடி கட்டடம் சீன நிறுவனம் புதிய சாதனை

தினமலர்  தினமலர்
ஒரே நாளில் 10 மாடி கட்டடம் சீன நிறுவனம் புதிய சாதனை

சங் ஷா:சீனாவில் ஒரு நிறுவனம், 10 மாடி கட்டடத்தை ஒரே நாளில் கட்டி முடித்து சாதனை படைத்துள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில், சங் ஷா நகரைச் சேர்ந்த பிராட் குரூப் என்ற நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் சங் ஷா நகரில் ஒரே நாளில், 10 மாடி கட்டடத்தை கட்டி அசத்தியுள்ளது. இதற்காக இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில், சரக்கு பெட்டக அளவில் கட்டட பகுதிகள் தனித்தனியாக தயாரிக்கப் பட்டன. இந்த பாகங்கள் கட்டுமான இடத்திற்கு எடுத்து வரப்பட்டு, 'போல்ட், நட்'டுகள் போட்டு இணைக்கப்பட்டன.

இந்த பணி, 28 மணி நேரம், 45 நிமிடங்களில் முடிந்தது. அதாவது, ஒரு நாளுக்கும் சற்று அதிகமான நேரத்தில், 10 மாடி கட்டடம் சங் ஷா நகரில் எழுந்துள்ளது. இதில் குடியேற உள்ள டாம் ரிட்டுசி கூறும் போது, ''மின்னல் வேகத்தில் கட்டடம் எழும்பினாலும், உட்புற அலங்காரங்கள் உட்பட அனைத்து பகுதிகளும் கன கச்சிதமாக உள்ளன,'' என்றார்.

இது குறித்து பிராட் குரூப் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த கட்டுமான தொழில் நுட்பம் செலவு குறைந்தது. அத்துடன், விருப்பமான இடத்திற்கு கட்டடத்தை நகர்த்தும் வசதியும் உள்ளது. அதேசமயம், எத்தகைய நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் உறுதியான அஸ்திவாரம் மற்றும் வலிமையான இணைப்புகளை உள்ளடக்கியது. உலகளவில் இந்த கட்டுமான தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிறுவனம், 10 மாடி கட்டடத்தின் கட்டுமான பணிகளை, 'யு டியூப்' வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதை ஏராளமானோர் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

மூலக்கதை