மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் தேர்வு ஆபத்தானவை - சூர்யா

தினமலர்  தினமலர்
மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் தேர்வு ஆபத்தானவை  சூர்யா

நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார். தற்போது கொரோனா காலத்திலும் நீட் தேர்வுக்கான ஆயத்த பணிகள் துவங்க உள்ளன. இந்நிலையில் ‛‛ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வு'' என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் சூர்யா.

அதில் அவர் கூறியிருப்பதாவது : ‛‛மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒருவித கல்வியும், பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வியும் உள்ள சூழலில் தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது. நீட் நுழைத்தேர்வு வைக்கப்படவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை.

நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய நீட் தேர்வின் பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆகவே நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவிடம் [email protected] எனும் மின்னஞ்சலுக்கு வருகிற ஜூன் 23ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை