ஆப்பிள் டெய்லி தலைமை ஆசிரியருக்கு ஜாமின் வழங்க சீன நீதிமன்றம் மறுப்பு

தினமலர்  தினமலர்
ஆப்பிள் டெய்லி தலைமை ஆசிரியருக்கு ஜாமின் வழங்க சீன நீதிமன்றம் மறுப்பு

ஹாங்காங்: ஹாங்காங் நாட்டை சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலமாக முழுவதுமாக கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து ஹாங்காங்கில் உள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் பலர் பொது இடங்களில் ஒன்று கூடி கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சீன அரசு ஹாங்காங் அரசின் எதிர்ப்பையும் மீறி கம்யூனிஸ்ட் கட்சியின் அத்துமீறலுக்கு எதிராக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள், கேலிச்சித்திர கலைஞர்கள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்து வருகிறது.

ஹாங்காங்கின் பிரபல பத்திரிகையான ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் முக்கிய நிர்வாகிகளை தற்போது சீன அரசு கைது செய்தது. இது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்த பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் ரயான் லா (47) மற்றும் நிர்வாக இயக்குனர் கிம் ஹங் (59) உள்ளிட்ட 5 பேரை கடந்த வியாழனன்று கைது செய்தனர்.



மேலும், சீன அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கட்டுரை எழுதிய இந்த பத்திரிகையின் அலுவலகம் 500 சீனா போலீசாரால் சோதனையிடப்பட்டது.கைது செய்யப்பட்ட இந்த பத்திரிகையின் ஆசிரியர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அடுத்த கட்ட விசாரணை, இன்னும் ஒன்றரை மாத விசாரணைக்குப் பிறகு வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயக ஆதரவு பத்திரிகையான ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை உலகம் முழுவதும் ஜனநாயக ஆதரவாளர்களால் அதிகமாக வரவேற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சீன அரசியல் சாசனத்தை விமர்சிக்கும் வகையில் இந்த பத்திரிகையில் பலவித கட்டுரைகள் வெளியானதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கம்யூனிச அரசு தரப்பு கூறுகிறது.

மூலக்கதை