இவங்களுக்கு நம்ம கூட விளையாடறதே வேலையாப் போச்சு: எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்

தினமலர்  தினமலர்
இவங்களுக்கு நம்ம கூட விளையாடறதே வேலையாப் போச்சு: எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்

பெ.நா.பாளையம்:சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போன்கள் வாயிலாக, மோசடி செய்யும் நபர்களிடம், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

முன்பணமாக...


ஊரடங்கை பயன்படுத்தி, 'ஆன்லைனில்' வேலை வாங்கி தருவதாக கூறி, முன்பணம் செலுத்த வேண்டும் என்று யாராவது, உங்களை தொடர்பு கொண்டால், உடனே அந்த அழைப்பை துண்டித்து விடவும். பெண்கள், தங்களது புகைப்படத்தை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளத்தில், பதிவிடுவதை தவிர்க்கவும். ஏதேனும் அடையாளம் தெரியாத நபர், உங்களை தொடர்பு கொண்டு, ஏ.டி.எம்., கார்டு எண்கள், ஓ.டி.பி., எண்கள், பேங்க் அக்கவுண்ட் எண்கள், பான் கார்டு எண்கள் இதுபோன்ற பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் ஏதேனும் கேட்டால், அந்த அழைப்பை துண்டித்து விடவும்.

இரட்டிப்பாகுதா...


ஏதேனும் நிறுவனம் என்ற பெயரில், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, வர்த்தகர் என்று அறிமுகமாகி, உங்களை தொடர்புகொண்டு, உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறினால், அவர்களிடம் ஏமாற வேண்டாம். உங்களுடைய மொபைல் போனுக்கு வரும், தவறான குறுஞ்செய்திகளை நம்பி, 'லிங்கை' தொடுவதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும். வங்கி கடன் தருவதாக, வங்கி கிளை மேலாளர் போல் தொலைபேசி அல்லது வேறு ஏதேனும் சமூக வலைதளத்தின் வாயிலாக, தொடர்பு கொண்டு, உங்களின் வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களைக் கேட்டால் தெரிவிக்கக் கூடாது.

வேண்டாம் புகைப்படம்...



பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை, 'மார்பிங்' செய்து, சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக, பணம் கேட்டு மிரட்டினால், அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்க வேண்டும். உங்களது மொபைல் போன் தொலைந்துவிட்டால், உடனே மொபைல் போன் எண்ணை 'பிளாக்' செய்து விடவும். இல்லை என்றால், உங்கள் எண் தவறாக பயன்படுத்தக் கூடும். கோவிட்டை பயன்படுத்தி, 'ஆன்லைனில்' ஆக்சிஜன் சிலிண்டர், குறைந்த விலையில், தருவதாக கூறி, முன் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினால், பணம் செலுத்த வேண்டாம்.

தகவல் திருட்டு...



இதயத்துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை கண்டறியும் கருவி என, எந்த செயலிகளையும் பதிவிறக்கம் செய்து, உங்களின் கைரேகைகளை பதிவு செய்வதால், உங்களைப் பற்றிய அனைத்து தகவலும் திருடப்படும். உங்களது உறவினர் மற்றும் நண்பர்கள், வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் மெசேஜ் வாயிலாக, உங்களை தொடர்பு கொண்டு, அவசர தேவை என்று கூறி பணம் கேட்டால், உடனே போன் வாயிலாக அவரை தொடர்பு கொண்டு, உறுதி செய்தபின் பணம் செலுத்தவும். ஏ.டி.எம்., கார்டு வாயிலாக, பெட்ரோல் பங்க், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் 'ஆன்லைன்' பரிவர்த்தனை செய்யும் போது, மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தள்ளுபடி தராங்களா...



இணையத்தில் பகிரப்பட்டு வரும், கவர்ச்சிகரமான வேலை வாய்ப்பு செய்திகள், வர்த்தக தள்ளுபடி செய்திகளை, நம்பி ஏமாற வேண்டாம். பழைய கார் மற்றும் பைக் தள்ளுபடி விலையில் உள்ளது என்று, ஆன்லைன் விளம்பரங்களை பார்த்து, ஏமாற வேண்டாம். உங்கள் நிலத்தில், மொபைல் டவர் அமைக்க அல்லது காற்றாலை டவர் அமைக்க உள்ளோம். உங்களுக்கு மாதம், மாதம் பல ஆயிரம் ரூபாய் வாடகை கிடைக்கும் என்றும், அதற்கு முன் பல லட்சங்கள் கொடுத்து, ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறினால், நம்ப வேண்டாம்.

ரகசியமாக இருக்கணும்...


பொது இடத்தில் உங்களது வங்கி பற்றிய தகவல், ரகசியங்களை பகிர்ந்து கொள்ளுதல் கூடாது. ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும்போது, யாராவது உங்களுக்கு தானாக வந்து உதவி செய்வதாக கூறினால் மறுத்து விடவும். உதவி செய்வதுபோல் நடித்து, உங்களுக்கு தெரியாமல் பின் நம்பர் மற்றும் ஏ.டி.எம்., நம்பரை தெரிந்து கொண்டு, உங்கள் வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் எடுத்து விடுவார்கள். அறிமுகமில்லாத நபரிடம், இணையத்தில், 'வீடியோ கால்' பேசுவதை தவிர்க்கவும். ஏனெனில் வீடியோ கால் பேசும் போது, ஸ்கிரீன் ஷாட், ஸ்கிரீன் ரெக்கார்டர் எடுத்து வைத்துக் கொண்டு, பணம் கேட்டு மிரட்ட நேரிடும்.

விளையாடுறாங்களா...



உங்கள் குழந்தைகள் பணம் செலுத்தி, 'ஆன்லைனில் கேம்' விளையாடுகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்கவும், ஆன்லைனில் பணம் செலுத்தி, 'கேம்' விளையாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பயன்படுத்தப்படாத பழைய வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும்; ஏனெனில் உங்கள் வங்கி கணக்கை வேறு யாரும் தவறாக பயன்படுத்தக் கூடும். தவறுகள் நடப்பது குறித்து, உங்களுக்கு தெரியவரும் நேரத்தில், உடனடியாக, www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

மூலக்கதை