வாரியத்தின் ரூ. 10 கோடி அம்போ? செயற்பொறியாளரிடம் விசாரணை!

தினமலர்  தினமலர்
வாரியத்தின் ரூ. 10 கோடி அம்போ? செயற்பொறியாளரிடம் விசாரணை!

சென்னை: பணிகளை சரிவர முடிக்காத ஒப்பந்ததாரருக்கு, 10 கோடி ரூபாயை விடுவித்த, வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் மோசடி புகாரில் சிக்கி உள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வீட்டுவசதி வாரியம் சார்பில், குடியிருப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகளால், மார்ச், ஏப்ரலில் பெரும்பாலான பணிகள் முடங்கின.தேர்தல் முடிந்து, புதிய அரசு பொறுப்புக்கு வரும் முன், அவசர கதியில் சில தவறுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கோவை பெரியநாயக்கன் பாளையம் திட்டத்துக்காக, ஒப்பந்ததாரருக்கு, அங்குள்ள செயற்பொறியாளர் சக்திவேல், இந்த காலத்தில், 6.50 கோடி ரூபாயை விடுவித்துள்ளார். ஜூன் 11ல், 3.50 கோடி ரூபாய் என, மொத்தம், 10 கோடி ரூபாய் விடுவித்துள்ளார்.

இது குறித்து வீட்டுவசதி வாரிய பணியாளர்கள் கூறியதாவது:பெரியநாயக்கன்பாளையம் திட்டத்துக்கு, வாரிய நிர்வாகத்திடம் வடிவமைப்பு ஒப்புதல் பெறப்படவில்லை. மேலும், ஒப்பந்தப்படி பணிகள் நடந்ததற்கான எந்த ஆவணமும் வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட வில்லை. பணிகளை செய்ததற்கான ஆதாரம் இன்றி, ஒப்பந்ததாரருக்கு வாரிய பணம், 10 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த புகார்கள், தலைமை அலுவலகத்துக்கு சென்றுள்ளன.இதுபற்றி விளக்கம் அளிக்க செயற்பொறியாளருக்கு, கண்காணிப்பு பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். செயற் பொறியாளரின் குளறுபடிகள் குறித்து, உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை