பல கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க பிரபல நடிகையின் தாய் கடத்தல்: பாகிஸ்தான் பிரதமரிடம் முறையீடு

தினகரன்  தினகரன்
பல கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க பிரபல நடிகையின் தாய் கடத்தல்: பாகிஸ்தான் பிரதமரிடம் முறையீடு

லாகூர்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்து கொண்டதாக கூறி, பிரபல நடிகை மீரா பாகிஸ்தான் பிரதமரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்திய சினிமாவில் நடித்தவரும், பிரபல பாகிஸ்தான் நடிகையுமான மீரா, சமீபத்தில் லாகூர் கேபிடல் சிட்டி போலீஸ் அலுவலகத்தில் (சிசிபிஓ) புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘லாகூரில் 200 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (இந்திய ரூபாய் ரூ.10 கோடி) மதிப்புள்ள எனது குடும்ப சொத்தை மியான் ஷாஹித் மெஹ்மூத் என்பவர் சட்ட விரோதமாக அபகரிக்க முயற்சிக்கிறார். நிலத்தை குத்தகைக்கு வாங்கிய அவர் தற்போது அதனை தராமல் கொலை மிரட்டல் விடுக்கிறார். என் தாய் ஷப்கத் சஹ்ரா புகாரியை  மியான் ஷாஹித் மெஹ்மூத் கடத்தி சென்றுவிட்டார். என்னுடைய முழு வாழ்க்கையையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளேன். எங்களுடைய சொத்து அபகரிப்பு விவகாரங்கள் பிரதமர் இம்ரான்கானுக்கும் புகார் அனுப்பி உள்ளேன். அரசின் பதிலுக்காக காத்திருக்கிறேன்’ என்றார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மியான் ஷாஹித் மெஹ்மூத், லாகூர் கேபிடல் சிட்டி போலீஸ் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘மீராவின் தாய் ஷப்கத் சஹ்ரா புகாரி மற்றும் அவரது சகோதரர் அஹ்சன் ஆகியோர் என்னை ஏமாற்றி வருகின்றனர்.மீராவின் தாயிடமிருந்து நான் விலைக்கு சொத்தை வாங்கினேன். அதற்கான பணத்தையும் கொடுத்தேன். இருப்பினும், சொத்து ஆவணங்களை பதிவு செய்து தரக்கோரினால், அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கின்றனர். அவரின் தாயை நான் கடத்தவில்லை’ என்றார். இருதரப்பு புகார்களையும் பெற்றுள்ள போலீசார், இவ்விகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை