மாற்றுத்திறன் குழந்தைகளை தேடி தத்தெடுக்கும் இளைஞர்

தினமலர்  தினமலர்
மாற்றுத்திறன் குழந்தைகளை தேடி தத்தெடுக்கும் இளைஞர்

லண்டன் : பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளை தேடிச் சென்று தத்தெடுத்து வருகிறார்.

ஐரோப்பாவின் பிரிட்டனில் ஹட்டர்ஸ்பீல்டு நகரில் வசிப்பவர் பென் கார்பென்டர் 37. இவர் 21 வயதில் மாற்றுத் திறன் குழந்தை ஒன்றை தத்தெடுத்தார்.இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஐந்து குழந்தைகளை தத்தெடுத்தார். இந்த ஐந்து குழந்தைகளும் மாற்றுத் திறனாளிகள்.பென் கார்பென்டருக்குப் பிறந்த டெடி என்ற ஆண் குழந்தைக்கு மரபணு கோளாறால் வளர்ச்சி பாதிப்பு இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன் திடீரென அந்த குழந்தை இறந்தது.

இந்த சோகத்திற்கு இடையிலும் பார்வையற்ற லுாயிஸ் என்ற ஆறாவது குழந்தையை பென் கார்பென்டர் தத்தெடுத்தார். மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள இக்குழந்தைக்கு தன்னிச்சையாக தசைகளை இயக்க முடியாது. இதுபோல பென் தத்தெடுத்த ஆறு குழந்தைகளும் 'ஆட்டிசம்' செவித் திறன் குறைபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

இது குறித்து பென் கார்பென்டர் கூறியதாவது: அன்பும் ஆதரவும் தேவைப்படும் மாற்றுத் திறன் குழந்தைகளை விரும்பித் தத்தெடுத்து வளர்க்கிறேன். இத்தகைய குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினமான காரியம். எனினும் அவர்களைப் பராமரித்து அன்பு செலுத்துவதில் தனி மகிழ்ச்சி கிடைக்கிறது. பெரிய குடும்பம் அமைய வேண்டும் என்பது என் கனவு. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை