இது உங்கள் இடம் : எல்லாரும் அர்ச்சகராக முடியுமா?

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம் : எல்லாரும் அர்ச்சகராக முடியுமா?

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
மா.ரவீந்திரகுமார், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதற்கான முயற்சியை, தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது சரியா, தவறா என்பது குறித்து, 2006 ஜூன் 7ல் வெளியான, 'துக்ளக்' இதழில், சோ எழுதிய தலையங்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று: கோவில்களில் இது போன்ற மாற்றங்களை செய்ய, ஒரு மதச்சார்பற்ற அரசு முனைவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகமத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனில் மத தலைவர்கள், ஆச்சார்யர்கள் போன்றோரால் எடுத்துக் கூறப்பட்டு, ஆத்திக சமூகம் ஏற்ற பின், மாற்றங்கள் செய்யலாம்.


பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்ற எண்ணம் தவறானது. ஆகம விதிப்படியான கோவில்களில் பிராமணர் அர்ச்சகராக முடியாது; கர்ப்பகிரஹத்தினுள் நுழைய முடியாது; விக்ரஹத்தை தீண்டவும் முடியாது. அப்படி நடந்தால், அது ஆகம விதிமுறை மீறல். சிவாச்சார்யார் என்ற பரம்பரையில் வந்தவர் மட்டுமே, அர்ச்சகராக முடியும்; இது ஆகம விதி. வைணவ கோவில்களில், இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று,- வைகானச முறையை பின்பற்றுகிற கோவில்கள்; மற்றொன்று, பாஞ்சராத்ர முறையை பின்பற்றுபவை. வைகானச முறை கோவில்களில், வைகானச பிரிவினர் தான் அர்ச்சகர் ஆக முடியும். இவர்கள், 'பட்டாச்சாரியர்' என, அழைக்கப்படுகின்றனர். பாஞ்சராத்ர முறை கோவில்களில், ஆகமம் மூன்று நிலைகளைஉடையது.
அதில் மூன்றாவது நிலையில், எந்த பிரிவினர் வேண்டுமானாலும் தகுதி பெற்று, பூஜை செய்யலாம்; முதல் இரண்டு நிலைகளில் முடியாது. வேறு சில வழிகளை பின்பற்றும் கோவில்களும் உள்ளன. சிதம்பரம் நடராஜர் கோவிலில் பதஞ்சலி பூஜாஸூத்ரம் விதிக்கும் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன; அங்கு தீட்சிதர் தவிர வேறு யாரும் கர்ப்பகிரஹத்தினுள் போக முடியாது; மத குருவாக இருந்தாலும் அனுமதி கிடையாது. மேல்மலையனுார் கோவிலில் பிராமணரல்லாத பர்வத ராஜ குலத்தினர் தான் அர்ச்சகர்கள்; மற்றவர்களுக்கு உரிமை கிடையாது. ஆகம விதிப்படி பூஜை நடத்தப்படும் கோவில்களில், சிவாச்சார்யார்களே அர்ச்சகராக முடியும்; மற்றவர்கள் யாராவது, கர்ப்பகிரஹத்தினுள் நுழைந்தால் கூட, புனிதம் கெடும்; பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

அர்ச்சகர் பெற்றிருக்கிற உரிமை, பரார்த்த பூஜை; அதாவது பிறருக்காக செய்கிற பூஜை. இதை செய்ய சிவாச்சார்யார் தவிர, வேறு எவருக்கும், அவர் எவ்வளவு உயர்ந்த கல்வி, வேத ஞானம், பக்தி எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் சரி,- உரிமை கிடையாது; இது ஆகம விதி. சிவாச்சார்யார் குலத்தில் பிறந்திருந்தால் மட்டும் போதாது... வேதம், ஆகமங்களை முழுமையாக அறிந்திருத்தல்; ஆசாரங்களை கடைப்பிடித்தல்; தீட்சை பெற்றிருத்தல் உட்பட பல தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்; அப்படிப்பட்டோர் தான் அர்ச்சகர் ஆக முடியும். இவ்வாறு சோ குறிப்பிட்டுள்ளார். எனவே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது, ஆகம விதிகளுக்கு புறம்பானது என்பது நிச்சயம். ஆகம விதிப்படி பிரதிஷ்டை நடந்து, அதன்படி வழிபாடு நடக்கிற கோவில்களில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தீர்மானிக்கப்பட்டால், அது ஆகம விரோதமே!


ஆகம விதிப்படி அல்லாமல், பிரதிஷ்டை நடந்து, பூஜை நடக்கிற கோவில்கள் பல உண்டு. அவற்றில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது, ஆகம விரோதம் அல்ல. நாட்டில், சிதிலமடைந்த ஆயிரக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்கள், ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அவற்றை சரி செய்வது தான், இப்போது மிக முக்கியம். நாட்டில் இன்னும் முக்கிய பிரச்னைகள் ஏராளம் இருக்கின்றன. அதை விடுத்து, நாத்திக கூட்டத்தினர் கோவில் பக்கம் மூக்கை நுழைக்காமல் இருப்பதே, நாட்டுக்கு நல்லது.


மூலக்கதை