அறிமுக வீராங்கனை ஷபாலி 2வது இன்னிங்சிலும் அபாரம்

தினகரன்  தினகரன்
அறிமுக வீராங்கனை ஷபாலி 2வது இன்னிங்சிலும் அபாரம்

பிரிஸ்டல்: இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அறிமுக வீராங்கனை ஷபாலி வர்மா 2வது இன்னிங்சிலும் அபாரமாக விளையாடி அசத்தினார். பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 396 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.  அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, மந்தனா - ஷபாலி ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 48.5 ஓவரில் 167 ரன் சேர்த்தனர். அபாரமாக விளையாடிய ஷபாலி 96 ரன்னில் ஆட்டமிழந்து (186 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) சாதனை சதத்தை நூலிழையில் நழுவவிட்டார். மந்தனா 78 ரன்னில் (155 பந்து, 14 பவுண்டரி) வெளியேற, அடுத்து வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்திருந்த இந்தியா, நேற்று 231 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தீப்தி ஷர்மா 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 165 ரன் பின்தங்கியிருந்த இந்திய அணியை 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடுமாறு (பாலோ ஆன் விதி: 4 நாள் போட்டிக்கு 150 ரன், 5 நாள் போட்டிக்கு 200 ரன்) இங்கிலாந்து கேட்டுக் கொண்டது. மந்தனா, ஷபாலி இருவரும் இன்னிங்சை தொடங்கினர். மந்தனா 8 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த தீப்தி பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அபாரமாக விளையாடிய ஷபாலி (17 வயது) அரை சதம் அடித்து அசத்தினார். தேநீர் இடைவேளையின்போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன் எடுத்திருந்தது. ஷபாலி 55, தீப்தி 18 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

மூலக்கதை