உலக டெஸ்ட் சாம்பியன் யார்? இந்தியா-நியூசி. பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
உலக டெஸ்ட் சாம்பியன் யார்? இந்தியாநியூசி. பலப்பரீட்சை

சவுத்தாம்ப்டன்: இந்தியா  நியூசிலாந்து அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது.  கிரிக்கெட் என்றாலே டெஸ்ட் போட்டி தான் என்ற நிலை மாறி… ஒருநாள், டி20, 100 பந்து என்று புதிய வடிவங்கள் உருவாகி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்து வருகின்றன. என்றாலும், ஒரு அணி அல்லது தனிப்பட்ட வீரர்களின் உண்மையான திறமையை அளவிடுவதற்கு டெஸ்ட் செயல்பாடுகளையே பிரதானமாக கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். அந்த அளவுக்கு டெஸ்ட் போட்டிகளின் தரம் வேற லெவல் என்பதில் சந்தேகமே இல்லை.  இந்த வகை கிரிக்கெட்டில் உலக சாம்பியன் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக ஐசிசி அறிமுகம் செய்த தொடர் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப். மொத்தம் 9 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் (2019 - 2021), வெற்றி சதவீத அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா, நியூசிலாந்து அணிகள் பைனலுக்கு தகுதி பெற்றன. உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்பதை கோஹ்லி பலமுறை நிரூபித்துவிட்டாலும்… டி20, ஒருநாள், சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி தொடரிலும் இந்தியாவுக்காக உலக சாம்பியன் பட்டங்களை வென்ற டோனியின் சாதனைகளை அவரால் நெருங்க முடியவில்லை. இதுவரை ஒரு ஐசிசி சாம்பியன் பட்டத்தையும் வென்றதில்லை என்ற வரலாற்றை கோஹ்லி இம்முறை மாற்றி எழுதுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சம பலத்துடன் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால், இறுதிப் போட்டியில் அனல் பறப்பது உறுதி.இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியது, வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளம் போன்ற அம்சங்கள் நியூசிலாந்துக்கு சாதகமாக இருந்தாலும், எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் மன உறுதி இந்திய அணியின் அசைக்க முடியாத பலமாக நம்பிக்கை அளிக்கிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சலான ஆட்டம், அவர்கள் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. வேகப்பந்துவீச்சு கூட்டணியில் நியூசிலாந்து சற்றே முன்னிலை வகித்தாலும், அஷ்வின் ஜடேஜா சுழல் கூட்டணி அதை ஈடுகட்டுகிறது. பேட்டிங்கில் யாருமே சளைத்தவர்கள் இல்லை எனும் அளவுக்கு இரு அணிகளும் சரிக்கு சரியான போட்டியை கொடுக்கின்றன.மொத்தத்தில் சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த இறுதிப் போட்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தாக அமையும். நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.  இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே (துணை கேப்டன்), ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, விரித்திமான் சாஹா (கீப்பர்).  நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டெல், டிரென்ட் போல்ட், டிவோன் கான்வே, கோலின் டி கிராண்ட்ஹோம், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் பட்டேல், டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், நீல் வேக்னர், பி.ஜே.வாட்லிங், வில் யங். * நேருக்கு நேர்…  இந்தியா  நியூசிலாந்து அணிகள் இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இந்தியா 21 வெற்றியும், நியூசிலாந்து 12 வெற்றியும் பெற்றுள்ளன. 26 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.* முதல் பரிசு ரூ.12 கோடி  உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி மற்றும் கோப்பை வழங்கப்படும். 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6 கோடி கிடைக்கும். இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால் இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் பட்டம், பரிசுத்தொகையை பகிர்ந்துகொள்ளும். 3வது இடத்துக்கு ரூ.3.3 கோடி, 4வது இடத்துக்கு ரூ.2.5 கோடி, 5வது இடத்துக்கு ரூ.1.5 கோடி வழங்கப்பட உள்ளது. மற்ற 4 அணிகளுக்கு தலா ரூ.75 லட்சம் கிடைக்கும்.

மூலக்கதை