டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் நாளை துவக்கம்: இந்தியா-நியூசிலாந்து பலப்பரீட்சை: பட்டம் வெல்லப்போவது யார்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் நாளை துவக்கம்: இந்தியாநியூசிலாந்து பலப்பரீட்சை: பட்டம் வெல்லப்போவது யார்?

சவுத்தாம்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் நாளை தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இதற்காக கடந்த 3ம் தேதி சவுத்தாம்டன் சென்றடைந்த இந்திய அணியினர் கடந்த ஒரு வாரமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலும், இங்கிலாந்து அணியை உள்ளூரிலும் வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகிறது.

ரோகித்சர்மா, கில், புஜாரா, ரகானே என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. ஆட்டத்தின் போக்கையே மாற்றும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

பந்துவீச்சில் பும்ரா, ஷமி, இசாந்த் என வேகத்தில் மிரட்ட காத்திருக்கின்றனர். ஆல்ரவுண்டர் ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளது கூடுதல் பலம்.

அஸ்வினும் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கைகொடுக்கலாம்.

மறுபுறம் நியூசிலாந்தும் சளைத்ததல்ல. அண்மையில் இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தி 22 ஆண்டுக்கு பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுடன் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்துள்ள நம்பிக்கையில் களம் காண்கிறது.

கேன் வில்லியம்சன், டெய்லர், லதாம் ஆகியோருடன் புதுமுக வீரர் கான்வேயும் பேட்டிங்கில் மிரட்டி வருகிறார். டிரென்ட் போல்ட், சவுத்தி, ஜேமிசன் வேகத்தில் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர்.

இவர்களின் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்வது இந்திய வீரர்களுக்கு கடும் சவால் தான். இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலையும் இவர்களுக்கு கைகொடுக்கும் என்பது கூடுதல் பலம்.

இந்திய நேரப்படி மாலை 3. 30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடர் நடத்தப்படுவதால் சாம்பியன் மகுடம் சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'இதுவரை நேருக்கு நேர். . . ''
இதுவரை இரு அணிகளும் 59 டெஸ்ட்டில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில் இந்தியா 21, நியூசிலாந்து 12ல் வென்றுள்ளன. 26 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

இந்திய மண்ணில் நடந்த 34 டெஸ்ட்டில் இந்தியா 16, நியூசிலாந்து 2ல் மட்டுமே வென்றுள்ளது. இதேபோல் நியூசிலாந்தில் நடந்துள்ள 25 டெஸ்ட்டில் இந்தியா 5ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து 10ல் வென்றுள்ளது. கடைசியாக 2019ம் ஆண்டு இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது.

இதில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.   ஐசிசி நடத்திய போட்டிகளில் நியூசிலாந்தை வென்று இந்தியாவுக்கு 18 ஆண்டு ஆகிறது. கடைசியாக 2003 உலகக் கோப்பையில் தான் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது.

அதன்பின் ஐசிசி கோப்பைகளில் நியூசிலாந்தை இந்தியா வென்றது இல்லை. கடைசியாக 2019 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றது.

அதற்கு பழிதீர்க்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

''அணிகள் விபரம்''

இந்திய உத்தேச அணி: ரோகித்சர்மா, சுப்மான் கில், புஜாரா, கோஹ்லி, ரகானே, ரிஷப் பன்ட், ஜடேஜா, அஸ்வின், இசாந்த்சர்மா அல்லது முகமதுசிராஜ், முகமது ஷமி, பும்ரா.

நியூசிலாந்து: டாம் லதாம், டேவன் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், கிராண்ட்ஹோம், ஹென்ரி நிக்கோல்ஸ், வாட்லிங், டிரெண்ட் போல்ட், டிம் சவுத்தி, ஜேமிசன், அஜாஸ் படேல்,

''மகுடம் சூடும் அணிக்கு  11. 75 கோடி பரிசு''
பைனலில் வென்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கதாயுதத்துடன் ரூ. 11. 75 கோடி பரிசு கிடைக்கும். 2வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 5. 75 கோடியும், 3வது இடம் பெறும் அணிக்கு ரூ. 3. 25 கோடி, 4வது இடம் வகிக்கும் அணிக்கு ரூ. 2. 5 கோடி, 5வது இடம் பெறும் அணிக்கு ரூ. 1. 5 கோடியும் பரிசாக கிடைக்கும்.

பைனல் டிராவில் முடிந்தால் முதல் 2 இடங்களுக்கான பரிசுத்தொகை சமமாக பிரித்து வழங்கப்படும்.

.

மூலக்கதை