நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு விலை கடுமையாக உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு விலை கடுமையாக உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு விலை கடுமையாக உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பெரு நகரங்களில் சமையல் எண்ணெய் விலை 77%, பருப்பு விலை 30% வரையிலும் அதிகரித்திருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் வகைகளின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாகவே உயர்ந்துவிட்டது. தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி கடலை எண்ணெய்(1லி) 179 ரூபாயாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 9% உயர்ந்து அதன் விலை 196 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடுகு எண்ணெய் விலை கடந்த ஆண்டு ரூ.132-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 34% உயர்ந்து 177ரூபாயாக உள்ளது. வனஸ்பதி எண்ணெய் விலை ரூ.106-லிருந்து 33% உயர்ந்து 141 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட நாடு முழுவதும் சோயா எண்ணெய் 36%, பாம்ஆயில் 37 சதவிகிதமும் விலை உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளில் கடந்த ஆண்டு ஒரு கிலோ 72 ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 4% விலை அதிகரித்துள்ளது. துவரம் பருப்பின் விலை 15% உயர்த்தப்பட்டுள்ளது. உளுத்தம் பருப்பின் விலையும் 8%, பயத்தம் பருப்பின் விலை 8%, உயர்ந்துள்ளது. 81 ரூபாய்க்கு விற்பனையான மசூர் பருப்பு இந்த ஆண்டு 87 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உலகளாவிய அளவில் பொருட்களின் விலை உயர்வால் சூரிய காந்தி எண்ணெயின் விலை 12 மாதங்களில் டெல்லி, சென்னை, மும்பை, ஆகிய மெட்ரோ நகரங்களில் 50 சதவீதம் உயர்ந்துவிட்டது. கொல்கத்தாவில் மட்டும் 77% அதிகரித்துள்ளது. இதனிடையே நாட்டில் சில்லறை பண வீக்கம், 6.3சதவீதமாக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் உணவுப்பண்டங்களில் விலை உயர்வால் இந்த பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது. இந்த பணவீக்க உயர்வு இந்திய ரிசர்வ் வங்கிக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் சம்பளம் குறைப்பு, வேலையிழப்பு, நாட்டு மக்கள் மிகவும் இக்கட்டான சூழலில் இந்த விலையேற்றத்தை சந்திக்கின்றனர். இத்துடன் இந்த ஆண்டில் கடந்த மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் காய்கறி விலை நாடு முழுவதும் 7.3% அதிகரித்துள்ளது. உலகளாவிய அளவில் ஏற்பட்ட விலை உயர்வு இதனை மேலும் அதிகரித்திருக்கிறது. பெட்ரோல் விலையும் 3% அதிகரித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்படும் போது உணவு பொருட்களின் விலை குறையலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். ஜூலை மாதத்தில் எண்ணெய் விலை ஓரளவு குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை