தடுப்பூசி போட்டு ஒருவர் மட்டுமே பலி: மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல்

தினகரன்  தினகரன்
தடுப்பூசி போட்டு ஒருவர் மட்டுமே பலி: மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல்

புதுடெல்லி: தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக இறந்ததாக மத்திய அரசின் குழு முதன்முறையாக தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரியில் தொடங்கியது. தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர். ஆனால், அவர்களின் மரணத்துக்கும், தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை என்றும், தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு ஏதேனும் தீவிர பக்கவிளைவுகள் ஏற்பட்டு அதனால் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கூறிவந்தது. அதேநேரம், தடுப்பூசி தொடா்பாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு தனிக் குழுவை அமைத்தது. அந்த குழு தற்போது தாக்கல் செய்த அறிக்கையில், ‘கடந்த மாா்ச் 8ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட 68 வயது நபா், ஒவ்வாமை (அனாபிலாக்ஸிஸ்) காரணமாக உயிரிழந்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக இக்குழுவின் தலைவர் என்.கே.அரோரா கூறுகையில், ‘தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும். அதனை எளிதில் குணப்படுத்த முடியும். அதனால், தடுப்பூசி போட்ட அரை மணி நேரம், சம்பந்தப்பட்ட தடுப்பூசி முகாமில் பயனாளிகள் அமர்ந்திருக்க வேண்டும்.  இதன்மூலமாக உயிரிழப்பை தவிர்க்க முடியும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளுடன் ஒப்பிடுகையில், பக்கவிளைவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. அந்த பக்கவிளைவுகள் ஏற்படுவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார். மத்திய அரசின் குழு அளித்த அறிக்கையில், ‘பிப்ரவரி 5ம்  தேதி தடுப்பூசி போட்ட பின்னர் மரணம் அடைந்த 5 பேர், மார்ச் 9ல் மரணம் அடைந்த 8 பேர், மார்ச் 31ம் தேதி மரணம் அடைந்த 18 பேர் ஆகியோரது பிரச்னைகள் ஆராயப்பட்டன. ஏப்ரல் முதல் வாரத்தில் 10 லட்சம் டோஸ் தடுப்பூசிக்கு 2.7 இறப்புகளும்,. 4.8 சதவீத மருத்துவமனை சேர்க்கைகளும் நடந்துள்ளன. தடுப்பூசி போட்டதால் மரணம் ஏற்பட்டதாகவும். மருத்துவமனைகளில் சேர்த்ததால் பாதகமான நிகழ்வுகள் ஏற்பட்டதாகவும் சில புகார்கள் அளிக்கப்பட்டதும் மதிப்பீடு செய்யப்பட்டது. கிட்டதிட்ட  31 மோசமான மற்றும் பாதகமான நிகழ்வுகள் ஆராயப்பட்டன. அவற்றில் 18 பேர் மரணத்துக்கு தடுப்பூசிதான் காரணம் என கூற முடியாது. (தற்செயலாக நிகழ்ந்துள்ளது, தடுப்பூசிக்கும் இதற்கும் தொடர்பில்லை). 3 பேருக்கு ஏற்பட்ட பாதிப்பு அவர்கள் தடுப்பூசி தொடர்பானவை என்று வகைப்படுத்தப்பட்டது. ஒன்று மட்டும் கவலை தொடர்பான எதிர்வினை என்றும், எஞ்சிய 2 பாதகமான விளைவுகள் வகைப்படுத்த முடியாதவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை