புலியை விரட்டியடித்த மூதாட்டி

தினகரன்  தினகரன்
புலியை விரட்டியடித்த மூதாட்டி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே உள்ள காந்தல்லூர் பாம்பன்பாறை பகுதியை சேர்ந்தவர் ேஜாணி. அவரது மனைவி ராஜம்மா (69). அவர்களது வீடு வனப்பகுதியை ஒட்டி உள்ளது. ஜோணி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜம்மா தனியாக வசித்து வருகிறார். தனக்கு துணையாக ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த பகுதி புலிகள் நடமாடும் பகுதியாகும். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் உள்ள வாத்துகளை பிடிப்பதற்காக ஒரு புலி வந்தது. இதை தெரிந்துகொண்ட அந்த பகுதியினர் புலியை விரட்டினர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு ராஜம்மா வளர்க்கும் நாய் பயங்கரமாக குரைத்தது. உடனே ராஜம்மா வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு புலி நாயை கடிக்க முயன்று கொண்டு இருந்தது. இதை பார்த்ததும் ராஜம்மா அதிர்ச்சியடைந்தார். உடனே ஒரு தடியால் புலியை தாக்கினார். இதனால் புலி நாயை விட்டுவிட்டு பின் வாங்கியது. இருப்பினும் ராஜம்மாவை தாக்க முயன்றது. உடனடியாக நாயுடன் அவர் வீட்டிற்குள் ஓடிவிட்டார். பின்னர் வீட்டில் இருந்து தீ பந்தத்தை எடுத்துகொண்டு வெளியே வந்து புலியை தாக்கினார். இதனால் புலி அங்கிருந்து ஓடிவிட்டது. புலி தாக்கியதில் நாயின் கழுத்து, தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை