ஆசிய கோப்பை தகுதிச்சுற்று: ஆப்கனுடன் 1-1 என டிரா; 3வது சுற்றுக்கு இந்தியா தகுதி

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை தகுதிச்சுற்று: ஆப்கனுடன் 11 என டிரா; 3வது சுற்றுக்கு இந்தியா தகுதி

தோகா: பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக ஆசிய அணிகள் தகுதி மற்றும் ஆசிய கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் கத்தாரில் நடந்து வருகின்றன. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 டிரா, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்தது. உலக கோப்பை தகுதி வாய்ப்பை ஏற்கனவே இந்தியா இழந்து விட்ட நிலையில் ஆசிய கோப்பையில் அடுத்த சுற்றுக்குள் தகுதி பெற 3வது இடத்தை தக்க வைக்க வேண்டிய நெருக்கடியில் நேற்று ஆப்கானிஸ்தானுடன் மோதியது. டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்குள் நுழையலாம் என்ற நிலையில் இந்தியாவும், கட்டாய வெற்றி நெருக்கடியில் ஆப்கனும் களம் இறங்கின. தரவரிசையில் 149வது இடத்தில் உள்ள ஆப்கான், 105வது இடத்தில் உள்ள இந்திய அணிக்கு கடும் நெருக்கடி அளித்தது. முதல் பாதியில் கோல்கள் எதுவும் விழவில்லை. 2வது பாதியில் 75வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆஷிக் அடித்த பந்தை பிடிக்க முயன்ற ஆப்கானிஸ்தான் கோல் கீப்பர் அஜிஜி அதனை நழுவவிட கோல் வலைக்குள் சென்றது. இந்த சுயகோலால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 82வது நிமிடத்தில் ஆப்கனின் ஜமானி அற்புதமாக கோல் அடித்து சமனாக்கினார். பின்னர் கோல் எதுவும் அடிக்கப்படாததால் 1-1 என போட்டி சமனில் முடிந்தது.   8 போட்டிகளின் முடிவில் இந்தியா 1 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி என 7 புள்ளிகளுடன் இ பிரிவில் 3வது இடத்தை பிடித்து ஆசிய கோப்பை 3வது சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றது.

மூலக்கதை