'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா

தினமலர்  தினமலர்
ஜி7 தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா

தைபே: சீனாவின் 28 போர் விமானங்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 1949ல் உள்நாட்டுப் போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தன. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என, சீனா தொடர்ந்து கூறி வருகிறது. 2016ல் தைவான் அதிபராக சாய் இங்-வென் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து, அந்நாடு மீது தூதரக, ராணுவ ரீதியாக சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டுமுதல் தனது இறையாண்மையைப் பாதுகாப்பதாகக் கூறி, தினமும் தைவானை நோக்கி போர் விமானங்களை சீனா அனுப்பி வருகிறது. கடந்த மார்ச்சில் அதிகபட்சமாக 25 போர் விமானங்களை பறக்கச் செய்திருந்தது.


இந்நிலையில், பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், 'சீனா - தைவான் நீரிணை பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் கூறுகையில், 'ஜி7 நாடுகள் வேண்டுமென்றே சீன உள் விவகாரங்களில் தலையிடுகின்றன. தேசிய இறையாண்மை, மேம்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக உள்ளது' எனத் தெரிவித்திருந்த நிலையில் சீனா, தைவானை நோக்கி போர் விமானங்களை அனுப்பியுள்ளது.


'தைவானின் வான் பாதுகாப்பு மண்டலமான தென்மேற்குப் பகுதியில் நேற்று (ஜூன் 15) முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகப்படியாக, 28 போர் விமானங்களை சீனா பறக்க விட்டுள்ளது' என, தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை