முற்றியது மோதல்.. இந்தியாவில் ட்விட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கியது ஒன்றிய அரசு!!

தினகரன்  தினகரன்
முற்றியது மோதல்.. இந்தியாவில் ட்விட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கியது ஒன்றிய அரசு!!

டெல்லி : ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்காததால் ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் சட்ட பாதுகாப்பை இழந்துள்ளது. இனி ட்விட்டர் தளத்தில் தனிநபர் சட்டத்தை மீறினாலும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, சமூக வலைத்தளங்களில் எழும் புகார்கள் மற்றும் குறைகளை களைவதற்காக ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனமும் பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டியது கட்டாயம். இந்த விதியை ஏற்று கூகுள், யூடியூப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொடர்பு தளங்களை ஏற்று நடத்தும் நிறுவனங்கள், பொறுப்பு அதிகாரியை நியமித்துவிட்டனர். கடந்த 26ம் தேதி முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனம் பொறுப்பு அதிகாரியை நியமிக்காததால் இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகள் 79ன்படி பெற்று வந்த சட்ட பாதுகாப்பை அந்நிறுவனம் இழந்துள்ளது.இனி ட்விட்டர் தளம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனமாகவே கருதப்படும் என்பதால் ட்விட்டரில் ஆட்சேபகரமான கருத்தை யார் பதிவு செய்தாலும் அது ட்விட்டர் நிறுவனம் செய்ததாகவே கருதப்படும். இதன் அடிப்படையில் ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குனர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் ட்விட்டர் நிறுவனத்திற்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்திற்கு பலமுறை வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதும் வேண்டுமென்றே புதிய ஐ.டி. விதிகளை அந்நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். புதிய ஐ. டி. விதிகளை முதலில் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் பின்னர் புதியவிதியின்படி தற்காலிக பொறுப்பு அதிகாரியை நியமிப்பதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது. ஆனால் அந்த நியமனத்திற்கான ஆவணங்களை ஒன்றிய அரசிடம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை