சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் பறித்த யூடியூப் மதனின் கள்ளக்காதலி சிக்கினார்: சென்னை அழைத்து வந்து துருவி துருவி விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் பறித்த யூடியூப் மதனின் கள்ளக்காதலி சிக்கினார்: சென்னை அழைத்து வந்து துருவி துருவி விசாரணை

சேலம்: சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் பறித்த யூடியூப் மதனின் கள்ளக்காதலி சிக்கினார். அவரை தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு தடை செய்த பப்ஜி கேமை, லைவ் ஸ்ட்ரீமிங்காக விளையாடி யூடியூப்பில் பிரபலமடைந்தவர் மதன். ஆன்லைனில் விளையாடும் போது, சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

மேலும், பப்ஜி கேமிற்கு அடிமையான சிறுவர், சிறுமிகளை, இளம்பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக புகார் எழுந்தது. மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைமில் 2 புகார்கள் தரப்பட்டது.

இதனையடுத்து, புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதையடுத்து, விசாரணைக்கு நேரில்  ஆஜராகும்படி மதனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

ஆனால் அவர் ஆஜராகாமல்  தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.   மதன், விபிஎன் சர்வரை பயன்படுத்தி செல்போன் உபயோகிப்பதால் அவரை  நெருங்குவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மதனின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்த போது, சேலத்தில் உள்ள ஒரு செல்போன் எண்ணுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு சேலம் சென்ற தனிப்படை போலீசார், குறிப்பிட்ட செல்போன் எண்ணை கண்காணித்தனர்.

அந்த எண்ணின் சிக்னல் தாதகாப்பட்டி சீரங்கன் தெருவில் உள்ள ஒரு வீட்டை காட்டியது.

தொடர்ந்து நேற்று காலை அந்த வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து, தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது மதன் அங்கு இல்லை. பின்னர் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அதில், திருமணமாகி குழந்தை உள்ள அந்த பெண், மதனுடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் அவரை சென்னைக்கு அழைத்துச் வந்து மதன் இருப்பிடம் குறித்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.



மதன் மீது 159 புகார்கள்
 மதன் மீது தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் காவல்துறைக்கு ஏராளமான புகார்கள் வர தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழக காவல்துறைக்கு இதுவரை 159 ஆன்லைன் புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்தந்த மாவட்ட சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதன் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை