இஸ்லாமிய முதியவரை ஜெய்ஸ்ரீராம் என்று கூறும்படி வற்புறுத்தி தாக்கும் வீடியோவை நீக்கவில்லை என கூறி ட்விட்டர் நிறுவனம் மீது உ.பி.போலீசார் வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
இஸ்லாமிய முதியவரை ஜெய்ஸ்ரீராம் என்று கூறும்படி வற்புறுத்தி தாக்கும் வீடியோவை நீக்கவில்லை என கூறி ட்விட்டர் நிறுவனம் மீது உ.பி.போலீசார் வழக்குப்பதிவு

லக்னோ :  உத்தரப் பிரதேச மாநிலம் காசியாப்பாத்தில் இஸ்லாமிய முதியவரை ஜெய்ஸ்ரீராம் என்று கூறும்படி வற்புறுத்தி தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அதனை நீக்கவில்லை என்று கூறி ட்விட்டர் நிறுவனம் மீது அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாப்பாத் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் சதாம் என்ற முதியவர் தொழுகை செய்வதற்கு சென்ற போது,  அவரை வழிமறித்து கடத்திய கும்பல் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கி உள்ளது. முதியவரை ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் என்று கூறும்படி கொடூரமாக தாக்கிய அந்த கும்பல், முதியவரின் தாடியினையும் கத்திரி கோளால் நறுக்கியுள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்துள்ள ஒருவர், அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.முதியவர் தாக்கப்படும் வீடியோ வேகமாக பரவுவதை அடுத்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து காசியாபாத் போலீசார் பிரவேஷ் குஜ்ஜார் என்பவர் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மதத்தை காரணமாக வைத்து முதியவர் தாக்கப்படவில்லை என்று கூறிய காசியாபாத் போலீசார், அப்துல் சமாத் விற்பனை செய்த தாயத்து பலன் அளிக்காததால் அவர் தாக்கப்பட்டதாக விளக்கம் அளித்தனர். ஆனால் மத மோதல்களை உருவாக்கும் எண்ணத்துடன் பகிரப்பட்ட வீடியோவை நீக்க ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்நிறுவனம் மீது காசியபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல மத கண்ணோட்டத்துடன் வீடியோவை பரப்பியதாக மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமீபத்திய நாட்களில் ஒன்றிய அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனம் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ட்விட்டர் நிறுவனம் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மூலக்கதை