வில்லியம்சன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு | ஜூன் 15, 2021

தினமலர்  தினமலர்
வில்லியம்சன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு | ஜூன் 15, 2021

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் பைனலுக்கான நியூசிலாந்து அணியில் காயத்தில் இருந்து மீண்ட வில்லியம்சன் இடம் பிடித்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18–22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இப்போட்டிக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முழங்கை காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் பங்கேற்கவில்லை.

முதுகுப் பகுதி காயத்தில் இருந்து மீண்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வாட்லிங் அணிக்கு திரும்பினார். ‘ஆல்–ரவுண்டராக’ கோலின் டி கிராண்ட்ஹோம், ‘சுழல்’ வீரராக அஜாஸ் படேல் இடம் பிடித்துள்ளனர்.

துணை கேப்டன் டாம் லதாம், ஹென்றி நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர், கான்வே ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய மிட்சல் சான்ட்னர், டேரில் மிட்சல் தேர்வு செய்யப்படவில்லை.

வேகப்பந்துவீச்சாளர்களான டிரண்ட் பவுல்ட், டிம் சவுத்தீ, மாட் ஹென்றி, நீல் வாக்னர், கைல் ஜேமிசன் தேர்வாகினர். வில் யங், விக்கெட் டாம் பிளன்டெல் இடம் பெற்றுள்ளனர்.

அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லதாம், டாம் பிளன்டெல், ராஸ் டெய்லர், கான்வே, கோலின் டி கிராண்ட்ஹோம், வாட்லிங், வில் யங், டிரண்ட் பவுல்ட், டிம் சவுத்தீ, மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல்.

மூலக்கதை