ஆப்கனில் போலியோ சொட்டு மருந்து போடும் பணியாளர்களை சுட்டுக்கொன்ற கொடூரர்கள்!

தினமலர்  தினமலர்
ஆப்கனில் போலியோ சொட்டு மருந்து போடும் பணியாளர்களை சுட்டுக்கொன்ற கொடூரர்கள்!

ஜலாலாபாத்: கிழக்கு ஆப்கனில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட வந்த பணியாளர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 சுகாதார பணியாளர்கள் உயிரிழந்தனர்.

நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை தவிர உலகெங்கிலும் போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளிலும் தடுப்பூசிகளுக்கு எதிராக பல தவறான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. அங்குள்ள தலிபான்கள் மற்றும் மதத் தலைவர்கள் முஸ்லிம் குழந்தைகளை கருத்தடைக்கு உள்ளாக்கும் ஒரு மேற்கத்திய சதி தான் தடுப்பூசி என பரப்புகிறார்கள். மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளை உளவு பார்க்க தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.


இந்நிலையில் ஆப்கனின் நங்கர்ஹர் மாகாணம் கோக்யானி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 15) நடந்த தாக்குதலில் 2 போலியோ சொட்டு மருந்து போடும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். சுர்க்ரோட் மாவட்டத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மற்றொரு தாக்குதலில் ஜலாலாபாத்தில் 3 பணியாளர்கள் காயமடைந்தனர். இவை அனைத்தும் 2 மணி நேர இடைவெளியில் நடந்துள்ளன. இவை தலிபான்களின் திட்டமிட்ட தாக்குதல் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இத்தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்க மறுத்துவிட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் ஜலாலாபாத்தில் 3 பெண் போலியோ சொட்டு மருந்து பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்குள்ளாக தற்போது நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அங்குள்ள சுகாதார பணியாளர்கள், மருத்துவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற தாக்குதல்களை தடுக்கவோ, குற்றவாளிகளுக்கு தண்டனை தரவோ எந்த ஒரு வழிமுறையும் இங்கு இல்லை என அங்குள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் வேதனைப்படுகின்றனர். இந்த சூழலில் அமெரிக்க படைகள் அங்கிருந்து செப்டம்பருக்குள் முழுவதுமாக வெளியேற உள்ளது.

மூலக்கதை