இன்ஜினியர்கள் தேவை அதிகரிப்பு : கல்லூரி நிர்வாகிகள் நம்பிக்கை

தினமலர்  தினமலர்
இன்ஜினியர்கள் தேவை அதிகரிப்பு : கல்லூரி நிர்வாகிகள் நம்பிக்கை

சென்னை 'வரும் காலங்களில் இன்ஜினியர்களின் தேவை பல மடங்கு அதிகரிக்கும். கல்லுாரிகளின் புதிய முயற்சியால், இன்ஜினியரிங் படிப்புக்கான வாய்ப்புகளும் பிரகாசமாகி உள்ளன' என, பொறியியல் கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களை, இன்ஜினியரிங் படிப்பில் சேர்ப்பதற்கான பணிகளை தனியார் கல்லுாரிகள் துவக்கியுள்ளன. கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளை தாண்டியும், இன்ஜினியர்களின் வேலை வாய்ப்பும், அவர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளதாக கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

பிரதான தேர்வு



சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் கதிரவன் கூறியதாவது:இன்ஜினியரிங் படிப்பிற்கு, அனைத்து துறைகளிலும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்பதற்கு, தற்போதைய கொரோனா சூழலும் மிகச் சிறந்த உதாரணம். குறுகிய காலத்தில் 120 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்து, ஓர் இடத்தில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்று மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியதில், இன்ஜினியர்களின் திட்ட
மிடல் மிக முக்கியமானது.வரும் காலங்களிலும், இன்ஜினியர்களின் தேவை, பலமடங்கு அதிகரிக்கவே செய்யும். எனவே, மாணவர்களின் பிரதான தேர்வு இன்ஜினியரிங் துறையாகவே உள்ளது.

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பல இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அனுமதி அளித்து அதிகமான இன்ஜினியர்களை உருவாக்கியதால், இன்று குறைந்த செலவில் அதிகமான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிகிறது.கல்வி, வங்கி, சுகாதாரம், ராணுவம், ரயில்வே, வேளாண்மை, உற்பத்தி, போக்குவரத்து, ஆராய்ச்சி, மருத்துவம், விண்வெளி, அணு ஆற்றல், சோலார் மற்றும் 'மேட் இன் இந்தியா' திட்டம் என, பல்வேறு துறைகளிலும், திட்டங்களிலும், இன்ஜினியரிங் படித்தவர்களின் பங்கும், தேவையும் அதிகமாக
உள்ளது.அனைத்து வளர்ந்த நாடுகளிலும், இந்திய இன்ஜினியர்கள் தான் அதிகமான எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். சர்வதேச அளவிலான பிரச்னைகளுக்கு இன்றளவும் தீர்வு காண்பதும், இந்திய இன்ஜினியர்கள் தான். இதன் வாயிலாக, நம் இன்ஜினியர்களின் கல்வியையும், திறமையையும் உணரலாம்.

'ஆன்லைன்' பயிற்சி



இன்ஜினியரிங் படிக்கும் போதே தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை, தேவையான பயிற்சிகளின் வழியே, மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு வழங்கினால், இன்ஜினியரிங் முடிப்பவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்க முடியும். தற்போதைய ஊரடங்கு காலத்தில், 'இ-லேப், இ-ஸ்கில்' என்ற மாற்று வழிகளால், மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்க முடியும். ஆன்லைன் வழியே செயல்முறை தேர்வையும் நடத்தலாம். புதிதாக சேரும் மாணவர்களுக்கு, 'அசெசிங் டூல்' என்ற ஆன்லைன் தேர்வு வழியாகவும் பயிற்சி அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

'வேலைவாய்ப்பு பிரகாசம்'

ஆர்.எம்.கே., கல்வி குழும தலைவர் மற்றும் தமிழ்நாடு தனியார் சுயநிதி பொறியியல் கல்லுாரி சங்க தலைவர் முனிரத்தினம் கூறியதாவது:திறன்சார் பயிற்சிகளை அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து, மாவட்ட வாரியாக நேரடியாக சென்று, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்துகிறோம். திறன்சார் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவை சார்ந்த பயிற்சிகளை பாடத்திட்டத்துடன் சேர்த்து வழங்குகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக, இன்ஜினியரிங் மாணவர்கள், முன்பை விட அதிக வேலை வாய்ப்பை பெறுகின்றனர். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என, அனைத்து இன்ஜினியரிங் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. கல்லுாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இடையே, ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் மாணவர்களின் திறமை மேம்பட்டு, வேலைவாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை