உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் டாஸ் வெற்றியை முடிவு செய்யும்... முன்னாள் வீரர்கள் கருத்து

தினகரன்  தினகரன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் டாஸ் வெற்றியை முடிவு செய்யும்... முன்னாள் வீரர்கள் கருத்து

சென்னை: இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்,  ‘டாஸ்’ வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டி நாளை மறுநாள் சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்க உள்ளது.  அதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இரு அணிகளின் பலம், பலவீனம் குறித்து  முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லட்சுமணன் (இந்தியா), இயான் பிஷப் (வெஸ்ட் இண்டீஸ்), ஷேன் பாண்ட் (நியூசி.) ஆகியோர் நேற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்த காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது இறுதிப்போட்டி குறித்து ஷேன் பாண்ட் கூறுகையில், ‘பைனலுக்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது நியூசிலாந்துக்கு கூடுதல் பலமாக இருக்கும். கூடவே இறுதிப்போட்டியை பொறுத்தவரை  ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.  டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்’ என்றார். அதேபோல் இயான் பிஷப் பேசும்போது, ‘இறுதிப்போட்டியில் டாஸ் வெல்வது முக்கியம். அதுவும் வெற்றி/தோல்வியை முடிவு செய்யும். முதலில் பேட்டிங் செய்யும் அணி ரன் குவிக்க சிரமப்படும் சூழல் இருக்கும். அதுமட்டுமல்ல, இறுதிப்போட்டிக்கு முன்பு இந்தியா போதுமான பயிற்சி ஆட்டங்களில் விளையாடவில்லை’ என்று கூறினார். கடைசியாகப் பேசிய விவிஎஸ் லட்சுமணன், ‘இந்திய அணி போதுமான பயிற்சி பெறாவிட்டாலும், எந்த சூழலிலும் எந்த சவாலையும் சந்திக்கும் திறமையான வீரர்களைக் கொண்ட அணி. அதற்கு ஆஸி. தொடர் உட்பட பல உதாரணங்கள் உள்ளன. அதனால் டெஸ்ட் இறுதிப்போட்டியிலும் இந்தியா சாதிக்கும். கூடவே டாஸ்  வெல்வது முக்கியம் தான்’  என்று தெரிவித்தார்.* இந்திய அணி அறிவிப்புநியூசிலாந்து அணியுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய ஷர்துல், மயாங்க், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், இங்கிலாந்து தொடரில் கலக்கிய அக்சர் படேல் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியா: கோஹ்லி(கேப்டன்), கில், ரோகித், புஜாரா, ரகானே, பன்ட் (கீப்பர்), ஆர்.அஷ்வின், ஜடேஜா, ஷமி, பும்ரா, இஷாந்த், முகமது சிராஜ், சாஹா (கீப்பர்), உமேஷ், ஹனுமா விஹாரி.

மூலக்கதை