யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் போலந்துக்கு எதிராக ஸ்லோவாக்கியா அசத்தல்

தினகரன்  தினகரன்
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் போலந்துக்கு எதிராக ஸ்லோவாக்கியா அசத்தல்

பீட்டர்ஸ்பர்க்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் ஸ்லோவாக்கியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வென்றது. ரஷ்யாவின் செயின் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த ஈ பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து - ஸ்லோவாக்கியா அணிகள் களம் கண்டன. இரு அணிகளுமே தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தி எதிரெதிர் கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தன. அப்படி ஒரு முயற்சியில் ஸ்லோவாக்கியா வீரர் அடித்த பந்தை போலந்தின் வொஜ்சிச் சிசென்ய் தடுக்க முயன்றபோது அது கோலானது. 18வது நிமிடத்தில் கிடைத்த இந்த சுயகோலால் முதல் பாதியில் ஸ்லோவாக்கியா முன்னிலை பெற்றது. தொடர்ந்து 2வது பாதியின் முதல் நிமிடத்திலேயே (46’) போலந்தின் கரோல் லிஜெட்டி கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.  கோல் இயந்திரம் ரபார்டோ லெவாண்டொவ்ஸ்கியின் முயற்சிகள் போலந்துக்கு கை கொடுக்கவில்லை. அதே நேரத்தில் ஸ்லோவாக்கியாவின் மிலன் ஸ்க்ரினியர் 69வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலையை தந்தார். அதே நிலை கடைசி வரை நீடிக்க ஸ்லோவாக்கியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை சுவைத்தது.ஸ்பெயின் அணியுடன் டிரா செய்தது ஸ்வீடன்: செவில்லா நகரில் நடந்த மற்றொரு ஈ பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயின் - ஸ்வீடன் அணிகள் மோதின. அந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது. இத்தனைக்கும் ஆட்டம் முழுவதும் ஸ்பெயின்தான் ஆதிக்கம் செலுத்தியது. மொத்தத்தில் 86 சதவீத நேரம் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வெறும் 14 சதவீத நேரம்தான் ஸ்வீடனால் பந்தை தொட முடிந்தது. பந்தை கடத்துவதில் துல்லியம், இலக்கை நோக்கி பந்தை அடித்த நேர்த்தி எதுவுமே ஸ்பெயினுக்கு கை கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு ஸ்வீடன் தற்காப்பு அரண் மிக வலுவாக அமைந்திருந்தது. இறுதி வரை அதை தகர்க்க முடியாத ஸ்பெயின் அணி 0-0 என்ற கணக்கில் டிராவுடன் திருப்தி அடைந்தது. முன்னதாக கிளாஸ்கோவில் நடந்த டி பிரிவு ஆட்டம் ஒன்றில் செக் குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது.

மூலக்கதை