நுகர்வோரில் பாதி பேர் சீன பொருட்களை வாங்குவதில்லை

தினமலர்  தினமலர்
நுகர்வோரில் பாதி பேர் சீன பொருட்களை வாங்குவதில்லை

புதுடில்லி:கடந்த 12 மாதங்களில், நாட்டில் உள்ள நுகர்வோர்களில் பாதி பேர், சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கவில்லை என தெரிவித்துள்ளனர்.இணையதள நிறுவனமான, ‘லோக்கல்சர்க்கிள்’ மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இம்மாதம், 10ம் தேதி வரை, 281 மாவட்டங்களில் உள்ள, 17 ஆயிரத்து, 800 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இது குறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:ஆய்வின்போது, ‘கடந்த, 12 மாதங்களில் வாங்கிய சீன பொருட்கள் எவை’ என்ற கேள்விக்கு, சீன தயாரிப்புகள் எதையும் வாங்க வில்லை என 43 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

இருப்பினும், 34 சதவீதம் பேர், ஒன்று முதல் இரண்டு பொருட்கள் வரை வாங்கியிருப்பதாக தெரிவித்தனர். 8 சதவீதம் பேர், 3 – 5 பொருட்களை வாங்கிஇருப்பதாக தெரிவித்தனர். மேலும், 4 சதவீதம் பேர், 5 – 10 பொருட்களை வாங்கி உள்ளதாக கூறினர். 6 சதவீதம் பேருக்கு, இது குறித்து எந்த அபிப்பிராயமும் இல்லை என தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், எல்லையில் சீனாவின் அத்துமீறலை அடுத்து, சீன பொருட்களை வாங்கும் எண்ணம் குறைந்துள்ளது.இது ஒருபுறமிருக்க, கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், 42 சதவீதம் அதிகரித்துள்ளது.இதற்கு முக்கிய காரணம், உயிர் காக்கும் மருத்துவ சாதனங்கள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன்ஆகியவை அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டது தான்.

மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்திருக்கும் நிலையில், வேறு வழியின்றி, மலிவாக கிடைக்கும் ஒரே காரணத்துக்காகவே, சீன பொருட்களை வாங்கியதாக ஆய்வில் பலர் தெரிவித்தனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை