அணு ஆயுதங்களை அதிகரிக்கும் இந்தியா,சீனா, பாக்.,

தினமலர்  தினமலர்
அணு ஆயுதங்களை அதிகரிக்கும் இந்தியா,சீனா, பாக்.,

ஸ்டாக்ஹோம்: சர்வதேச அளவில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகள் அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக, சுவீடனை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது.

அந்த புத்தகத்தில் இடம்பெற்ற தகவலின்படி, 2021ல் இந்தியாவிடம் 156, சீனாவிடம் 350, பாகிஸ்தானிடம் 165 அணு ஆயுதங்கள் உள்ளன. இதுவே கடந்த ஆண்டில், மேற்கண்ட நாடுகள் முறையே 150, 320, 160 அணு ஆயுதங்கள் வைத்திருந்தன.

சர்வதேச அளவில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள 9 நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா நாடுகளிடம் மொத்தம் 13,080 அணு ஆயுதங்கள் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளது.

ரஷ்யாவிடம் 6,255; அமெரிக்காவிடம் 5,550; பிரான்சிடம் 290; பிரிட்டனிடம் 290; இஸ்ரேலிடம் 90; வட கொரியாவிடம் 40-50 அணு ஆயுதங்கள் உள்ளன.அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை தவிர்த்து மற்ற நாடுகளும் அணு ஆயுதங்களை தயாரிப்பதுடன், புதிய ஆயுதங்களை உருவாக்கும் முயற்சித்து வருகின்றன.


சீனா தனது அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி விரிவுபடுத்தி வருகிறது. அதேபோல், இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை அதிகரித்து வருகின்றன. சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுதங்கள் தொடர்பாக பாகிஸ்தான் உதவி பெற்று வருகிறது. அதேநேரத்தில் இந்தியா தனது சொந்த முயற்சியினாலும், சொந்த தொழில்நுட்பங்கள் மூலம் அணுஆயுதங்களை நவீனப்படுத்துவதுடன், அதிகரித்தும் வருகிறது. இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஹான்ஸ் எம். கிறிஸ்டென்சென் கூறுகையில், பனிப்போர் முடிவுக்கு பின்னர், சர்வதேச அளவில், அணுஆயுத கையிருப்புகள் குறைந்து வந்த நிலையில், தற்போது, சர்வதேச ராணுவ கையிருப்புகளில் அணு ஆயுதங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.

தற்போதைய நிலையில், இந்தியாவிடம் நிலத்தில் இருந்து தாக்கும் வல்லமை கொண்ட பிரித்வி-2 அக்னி-1, அக்ஜி2, அக்னி3 , அக்னி-5 ஏவுகணைகள் உள்ளன.சுகோய் 30 எம்கேஐ, மிராஜ் 2000 ஜக்குவார் , ரபேல் போர் விமானங்கள் மூலம் அணு ஆயுதங்களை வைத்து தாக்கும் திறன் பெற்றுள்ளது.

மூலக்கதை