யூரோ கால்பந்து; உக்ரைனை வீழ்த்தியது நெதர்லாந்து: மற்றொரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி

தினகரன்  தினகரன்
யூரோ கால்பந்து; உக்ரைனை வீழ்த்தியது நெதர்லாந்து: மற்றொரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி

ஆம்ஸ்டர்டாம்: யூரோ கால்பந்து தொடரில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணி) நடந்த போட்டியில் நெதர்லாந்து அணி, 3-2 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் ஏதும் போடவில்லை. இருப்பினும் பந்து, பெரும்பாலும் நெதர்லாந்து வீரர்களிடமே இருந்தது. இரண்டாம் பாதியில் 52வது நிமிடத்தில் நெதர்லாந்தின் முன்கள வீரர் ஜார்ஜினோ, ஒரு ஃபீல்ட் கோல் அடித்து, கணக்கை துவக்கினார். தொடர்ந்து 58வது நிமிடத்தில் வூட் வேகோர்ஸ்ட் ஒரு கோல் அடிக்க 2-0 என நெதர்லாந்து முன்னிலை பெற்றது. ஆனால் 75வது நிமிடத்தில் உக்ரைனின் ஆண்ட்ரியும், 79வது நிமிடத்தில் ரோமனும் அடுத்தடுத்து கோல் அடிக்க, போட்டி 2-2 என்ற சமநிலையை எட்டியது. இதனால் நெதர்லாந்து அணி வீரர்கள் பதற்றமடைந்தனர். 85வது நிமிடத்தில் நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் டென்செல் டம்ஃப்ரைஸ், சக வீரர் கொடுத்த பாசை தலையால் முட்டி, அற்புதமான கோலாக மாற்றினார். இதையடுத்து 3-2 என்ற கோல் கணக்கில் ஒரு வழியாக நெதர்லாந்து வென்று, தப்பிப் பிழைத்தது. முன்னதாக லண்டன் மற்றும் புகாரெஸ்ட்டில் (ருமேனியா) நடந்த போட்டிகளில் இங்கிலாந்து, குரோஷியாவை 1-0 என்ற கோல் கணக்கிலும், ஆஸ்திரியா, வடக்கு மெசடோனியாவை 3-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி வெற்றி பெற்றன.

மூலக்கதை