ஜனாதிபதி, மோடி, அமித் ஷாவை யோகி சந்தித்த பின்னணி: உ.பி தேர்தலுக்கு முன்பாக மாநிலம் இரண்டாக பிரிப்பு?: பூர்வஞ்சல் என்ற புதிய மாநிலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜனாதிபதி, மோடி, அமித் ஷாவை யோகி சந்தித்த பின்னணி: உ.பி தேர்தலுக்கு முன்பாக மாநிலம் இரண்டாக பிரிப்பு?: பூர்வஞ்சல் என்ற புதிய மாநிலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்

லக்னோ: உத்தரபிரதேச பேரவை தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தை இரண்டாக பிரித்து புதியதாக பூர்வஞ்சல் என்ற மாநிலம் உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், யோகி ஆதித்யநாத் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேச மாநில அரசியலில் கடந்த நாட்களாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், பாஜக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அவர் தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து சமாதனப்படுத்தியதாக கூறப்பட்டது.

அதேநேரம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களையும் யோகி சந்தித்ததால், தற்போது மற்றொரு செய்தி உத்தரபிரதேசத்தில் வலம் வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை இரண்டாக பிரித்து புதியதாக பூர்வஞ்சல் என்ற மாநிலத்தை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



மேலும், புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான சட்ட செயல்முறைகள் தொடங்கிவிட்டதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பாஜக மூத்த தலைவரான முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சி காலத்தில், ​​மத்திய பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கர்  என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் பிறந்தது. பீகாரில் இருந்து ஜார்கண்ட் என்ற மாநிலம் உருவானது.

இவ்வாறாக, தற்போது உத்தரபிரதேசத்திலிருந்து பூர்வஞ்சல் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகின்றன. இவ்வாறு புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டுமானால், மத்திய அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அரசியலமைப்பின் 3வது பிரிவை பயன்படுத்தி எல்லைகளை மாற்றியமைக்க முடியும்.

எந்தவொரு மாநிலத்தின் பரப்பையும் அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும். எல்லை வரம்புகளை மாற்றியமைக்க முடியும்.

மாநிலத்தின் பெயரையும் மாற்ற முடியும். ஒருவேளை பூர்வஞ்சல் மாநிலம் அமைந்தால்,  இப்பகுதியின் எம்எல்ஏக்கள்  புதிய மாநிலத்தின் பிரதிநிதிகளாக இருப்பார்கள்.

புதிய மாநிலத்தில் தற்காலிக  சட்டமன்றம் உருவாக்கப்படும். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



இங்கு பெரும்பான்மையைக் கொண்ட கட்சி ஆட்சி  அமைக்க அழைக்கப்படும். இன்றைய நிலையில் பேசபட்டு வரும் மாநில பிரிப்பு  திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில், உத்தரபிரதேச மாநில பேரவை தேர்தலுடன்  பூர்வஞ்சல் தேர்தலும் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காரணம்,  உத்தரபிரதேச மாநிலத்தின் தற்போதைய சட்டமன்றத்தின் காலம் இன்றும் 8 மாதங்களே  உள்ளன. அதனால், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக புதியதாக பூர்வஞ்சல் மாநிலத்தை உருவாக்க முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.



.

மூலக்கதை