கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவி: தமிழக அரசின் நடைமுறையை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும்: நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவி: தமிழக அரசின் நடைமுறையை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும்: நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பேட்டி

மும்பை: கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கையைப் போல்  நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூறினார். பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, இந்தியாவில் பிறந்த அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஆவார்.

இவர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘கொரோனா ஊரடங்கு இந்தியாவின் பொருளாதாரத்தை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உணவளிக்க வேண்டும்.

அதேநேரம் பொருளாதாரத்தை மீட்பதும் அவசியம். தமிழக அரசைப் போன்று, நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்.‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ கார்டு திட்டத்தில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு பிரச்னை உள்ளது. எனவே, அனைவருக்கும் உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு கடைபிடிக்கும் முறையை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும். கொரோனா காலகட்டத்தில் பல லட்சம் பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.

பொருளாாதார வசதி படைத்தவர்கள் செலவு செய்யாததால் பொருளாதாரத்தின் சுழற்சி முடக்கப்பட்டுள்ளது. அதனால், மக்களுக்கு குறைந்தபட்சம் குறிப்பிட்ட தொகையை வழங்குவதின் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

அவர்கள் பணத்தை செலவிடுவார்கள். இதனால், தேங்கி நிற்கும் பொருளாதாரத்தை துரிதப்படுத்த முடியும்.

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில், ஊரடங்கு மட்டுமே தீர்வாக இருக்க முடியாது. கொரோனா முதல் அலை ஏற்பட்ட போது ஊரடங்கை கடுமையாக்கி இருக்க வேண்டியதில்லை.கொரோனா பரவல் அதிகமாக இருக்கும்போதுதான் ஊரடங்கு தேவைப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எப்படி குறைந்தது என்பது புரியவில்லை.

அதனால், கடந்த ஜனவரியில் கொரோனா பரவல் முடிந்துவிட்டதாக மக்கள் நினைத்தனர். அதன் தொடர்ச்சியாக நடந்த தேர்தல்களும், பண்டிகைகளும் மற்றொரு அலையை ஏற்படுத்தின.

இன்றும், மூன்றாவது அலை எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத நிலையே நீடிக்கிறது. ஆனால் இரண்டாவது அலையிலிருந்து பெற்ற பாடங்களின் அடிப்படையில், மூன்றாவது அலைக்கு மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருகிறது.மகாராஷ்டிராவில் தேர்தலோ, கும்பமேளாவோ இல்லை என்றாலும் அங்கு நிலைமை மோசமாக இருந்தது. இருப்பினும், கொரோனா போரில் மகாராஷ்டிரா சரியான திசையில் சென்று கொண்டுள்ளது.

தடுப்பூசி விஷயத்தை பொறுத்தமட்டில், வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படுமா? என்பது சந்தேகமாக உள்ளது. தடுப்பூசி விநியோகம் செய்யும்  நிறுவனங்கள், இதுபோன்ற எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தடுப்பூசி எவ்வளவு இருப்பு உள்ளது; அதனை எவ்வளவு காலகட்டத்திற்குள் போடுவது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கூறினார்.

.

மூலக்கதை