சிறு குழுக்கள் உலகை ஆள முடியாது: ஜி7 மாநாடு குறித்து சீனா விமர்சனம்

தினமலர்  தினமலர்
சிறு குழுக்கள் உலகை ஆள முடியாது: ஜி7 மாநாடு குறித்து சீனா விமர்சனம்

பெய்ஜிங்: சிறு குழுவால், உலகத்தை ஆட்சி செய்ய முடியாது என ஜி7 மாநாடு குறித்து சீனா விமர்சனம் செய்துள்ளது.

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைப்பு, 'ஜி - 7' என, அழைக்கப்படுகிறது.நடப்பு ஆண்டுக்கான ஜி - 7 மாநாட்டை, 11 - 13 வரை, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைமை ஏற்று நடத்துகிறது. இதில் விருந்தினர்களாக பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



இந்த மாநாடு தொடர்பாக பிரிட்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: சில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் முடிவு எடுக்கும் காலம் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்து விட்டது. எங்களை பொறுத்தவரை ,எந்த நாடாக இருந்தாலும், அது பெரியதோ அல்லது சிறியதோ, பலவீனமானதோ அல்லது பலமானதோ, ஏழை அல்லது பணக்கார நாடுகளோ அனைத்தும் சமம். உலக விவகாரங்கள் குறித்து அனைத்து நாடுகளும் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். உலகளாவிய அமைப்பில், ஐ.நா., கொள்கையை ஒட்டிய சர்வதேச முடிவுகள் செல்லுபடியாகும். சிறிய எண்ணிக்கை கொண்ட நாடுகள் அமைத்த குழுவின் முடிவுகள் செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை