ரோகித்–பவுல்ட் மோதல்: சேவக் ஆர்வம் | ஜூன் 12, 2021

தினமலர்  தினமலர்
ரோகித்–பவுல்ட் மோதல்: சேவக் ஆர்வம் | ஜூன் 12, 2021

புதுடில்லி: ‘‘உலக டெஸ்ட் பைனலில் ரோகித், பவுல்ட் மோதலை காண ஆர்வமுடன் இருக்கிறேன்’’ என, சேவக் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18–22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இப்போட்டிக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா துவக்கம் தர உள்ளார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவக் கூறியது: நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட், டிம் சவுத்தீ வேகக் கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலான இருக்கும். இதில் இந்திய அணிக்கு துவக்கம் தர உள்ள ரோகித் சர்மா, பவுல்ட் பந்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிறந்த பேட்ஸ்மேனான ரோகித், 2014ல் இங்கிலாந்து மண்ணில் விளையாடி உள்ளார். இவரது சமீபத்திய செயல்பாடும் சிறப்பாக இருப்பதால், இம்முறை இங்கிலாந்து மண்ணில் துவக்க வீரராக சாதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. துவக்க வீரர்களாக யார் களமிறங்கினாலும் முதல் 10 ஓவரை கவனமாக விளையாட வேண்டும். புதிய பந்து அதிகம் ‘சுவிங்’ ஆகும் என்பதால், தட்பவெப்பநிலை, ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு ரன் சேர்க்க வேண்டும்.

இதேபோல இம்முறை ரிஷாப் பன்ட் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவார். ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் இவருக்கு கைகொடுக்கும். ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய திறமை இவரிடம் உண்டு. புஜாராவின் ‘ஸ்டிரைக் ரேட்’ குறித்து விமர்சிக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் போட்டியில் ‘ஸ்டிரைக்ரேட்’ ஒரு பொருட்டல்ல. நீண்ட நேரம் பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும். புஜாராவின் பங்களிப்பு இம்முறை இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுக்கும்.

இந்திய அணி, மூன்று ‘வேகம்’, இரண்டு ‘சுழல்’ என, 5 பவுலர்களுடன் களமிறங்கினால் நன்றாக இருக்கும். அஷ்வின், ஜடேஜா பேட்டிங்கிலும் கைகொடுப்பர் என்பதால் 6வது ‘பேட்ஸ்மேன்’ தேவையில்லை.

இவ்வாறு சேவக் கூறினார்.

மூலக்கதை