‘ட்ரோன்’ மூலம் வினியோகம் ‘பிளிப்கார்ட்’ முயற்சி

தினமலர்  தினமலர்
‘ட்ரோன்’ மூலம் வினியோகம் ‘பிளிப்கார்ட்’ முயற்சி

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், தெலுங்கானா அரசுடன் இணைந்து, தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகளை, ஆளில்லா குட்டி விமானமான, ‘ட்ரோன்’ வாயிலாக வினியோகம் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது.

இதன் மூலம், தொலைதுாரப் பகுதிகளுக்கு, எளிதில் மருந்து பொருட்களை வினியோகம் செய்ய முடியும். இந்த திட்டத்துக்கு, ‘வானிலிருந்து மருந்து’ என பெயரிடப்பட்டுஉள்ளது.இந்த முயற்சியில், பிளிப்கார்ட் தரப்பில், ‘ட்ரோன்’ மற்றும் வினியோகத்தை மேற்கொள்ளும். சாலை உள்ளிட்ட வசதிகள் இல்லாத, எளிதில் அணுக இயலாத பகுதிகளில், வினியோகத்தை பாதுகாப்பாகவும், எளிதாகவும் இதன் வாயிலாக செய்ய முடியும் என, பிளிப்கார்ட் தெரிவித்துஉள்ளது.இந்த வெள்ளோட்டம், ஆறு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து, பிளிப்கார்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:முதன் முதலாக, ‘ட்ரோன்’ வாயிலாக, இந்த வினியோக முயற்சியில் இறங்க உள்ளோம். கொரோனா இது போன்ற புதிய பல வாய்ப்புகளையும் வழங்கி உள்ளது. எங்களிடம் இருக்கும் தொழில்நுட்ப வசதியால், இதை செய்ய முடியும் என கருதுகிறோம்.

மேலும், ‘ட்ரோன்’ வாயிலான இந்த முயற்சி, கொரோனா காலத்தில் மட்டுமின்றி; இயற்கை பேரழிவுகள் காலத்திலும் பயனுள்ளதாக இருக்கும். நிலப்பரப்பின் வழியாக சென்று சேர முடியாத நிலையில், வான் வழியாக உதவிகளை கொண்டு சேர்க்க முடியும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.

மூலக்கதை