ரெய்னா சுயசரிதை * நாளை வெளியீடு | ஜூன் 12, 2021

தினமலர்  தினமலர்
ரெய்னா சுயசரிதை * நாளை வெளியீடு | ஜூன் 12, 2021

சென்னை: ரெய்னாவின் சுயசரிதை ‘பிலீவ்’ நாளை வெளியாகிறது. 

இந்திய அணி முன்னாள் வீரர் ரெய்னா 34. இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் (5,615 ரன், 36 விக்.,) பங்கேற்றார். கடந்த ஆண்டு தோனியுடன் சேர்ந்து சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். ஐ.பி.எல்., தொடரில் 2008 முதல் சென்னை அணிக்காக விளையாடுகிறார். இவர் ‘பிலீவ்’... கிரிக்கெட் எனக்கு என்ன கற்றுக் கொடுத்தது, என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். 

இந்திய அணிக்காக விளையாடியது, சச்சினிடம் இருந்து பெற்ற ‘பிலீவ்’ (நம்புங்கள்) என்ற வார்த்தையை தனது கையில் ‘டாட்டூ’ குத்தியது, காயங்கள், மோசமான ‘பார்மில்’ இருந்து மீண்டு வர உதவிய இந்த வார்த்தை குறித்து குறிப்பிட்டுள்ளார். கொடுமைகளை அனுபவித்த ஒரு சிறுவன் லட்சக்கணக்கான ரசிகர்களால் போற்றப்படும் கிரிக்கெட் வீரராக மாறிய பயணத்தை இதில் தெரிவித்துள்ளார். சச்சின், கும்ளே, டிராவிட், கங்குலி, தோனி உள்ளிட்டவர்களிடம் இருந்து பெற்ற அனுபவங்கள், நம்பிக்கையின் முக்கியத்துவம், அன்பு, நட்பின் முக்கியத்துவத்தை இது விவரிக்கிறது. 

ரெய்னா வெளியிட்ட செய்தியில்,‘எனது சுயசரிதை ‘பிலீவ்’, நாளை வெளியாகிறது. இதை படிக்க உங்களுக்கு நேரம் கிடைக்கும் என நம்புகிறேன்,’ என தெரிவித்துள்ளார். 

மூலக்கதை