தனிமையில் இந்திய வீரர்கள்: இலங்கை தொடருக்காக | ஜூன் 12, 2021

தினமலர்  தினமலர்
தனிமையில் இந்திய வீரர்கள்: இலங்கை தொடருக்காக | ஜூன் 12, 2021

புதுடில்லி: இலங்கை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் (ஜூலை 13, 16, 18), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 21, 23, 25) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, ருதுராஜ், தேவ்தத் படிக்கல், புவனேஷ்வர், வருண் சக்கரவர்த்தி, சேட்டன் சக்காரியா உள்ளிட்டோர் இடம் பெற்றள்ளனர்.

இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள், மும்பையில் நாளை முதல் 14 நாட்களுக்கு (ஜூன் 14–28) தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். அப்போது அவர்களுக்கு 6 முறை ‘கொரோனா’ பரிசோதனை நடத்தப்படும். முதல் 7 நாட்கள் வீரர்கள் தனித்தனி ‘ரூமில்’ தான் இருக்க வேண்டும். கடைசி 7 நாட்கள், ‘ஜிம்’, சில குறிப்பிட்ட பகுதிகளில் பயிற்சி செய்யலாம். அதன்பின் கொழும்பு செல்லும் இந்திய வீரர்கள், ஓட்டலில் மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வர். அப்போது தனித்தனியாக பயிற்சியில் ஈடுபடுவர். அதன்பின், குழுவாக இணைந்து பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இங்கிலாந்து தொடருக்கு சென்றுள்ள இந்திய வீரர்கள் பின்பற்றியது போல எல்லா விதிமுறைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். வெளிமாநிலங்களில் இருக்கும் வீரர்கள் தனிவிமானம் மூலம் மும்பைக்கு வருவர். மும்பை ஓட்டலில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின், ‘கொரோனா’ பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். அப்போது வீரர்கள் பொதுவான இடத்தில் சந்தித்துக் கொள்வர். தவிர ‘ஜிம்மில்’ பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இலங்கை சென்றதும், போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து 3 பயிற்சி போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும்,’’ என்றார்.

இந்திய அணிக்கு தேர்வானது குறித்து சக்காரியா கூறுகையில்,‘‘இலங்கை தொடரில் வலைப்பயிற்சி பவுலராக தேர்வு செய்யப்பட்டிருந்தால் கூட மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது பெரிய ஆச்சரியமாக உள்ளது. ஐ.பி.எல்., தொடரில் எனக்கு வாய்ப்பு வரும் வரை காத்திருக்க முடிவு செய்தேன். ஆனால் பயிற்சி முகாமிற்கு சென்றதும் நம்பிக்கை வந்தது. பலரும் என் மீது நம்பிக்கை வைக்க, அதுவே சிறப்பாக செயல்பட உதவியாக இருந்தது. தற்போது இந்திய அணிக்காக சாதிக்க, நம்பிக்கையுடன் தயாராகி வருகிறேன்,’’ என்றார்.

மூலக்கதை