ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கானது. எனவே அதை மேற்கு வங்க அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுதிட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் 1.35 கோடி மக்கள் பயனடைகின்றனர். பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, தெலங்கானா, உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.\r தமிழகத்தை பொறுத்தவரை தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களை எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையிலும், புலம்பெயர் குடும்பங்கள் தங்களின் ரேஷன் கார்டு விவரங்களின் அடிப்படையில் உணவு தானியங்கள் பெறத்தக்க வகையிலும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு புலம் பெயரும் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்கள், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை பயோமெட்ரிக் மூலம் எந்த மாநிலத்துக்கு இடம்பெயர்கிறாரோ அங்கு பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\r கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலைகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அரசு உதவிகளை பெறுவதற்காக அமைப்பு சாரா தொழிலாளர்களின் பதிவு நடைமுறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை எந்தவித காரணமும் கூறாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை