முதல் போட்டியில் இத்தாலி அபார வெற்றி: 3-0 என துருக்கியை பந்தாடியது

தினகரன்  தினகரன்
முதல் போட்டியில் இத்தாலி அபார வெற்றி: 30 என துருக்கியை பந்தாடியது

ரோம்: 16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) நேற்று தொடங்கியது. 11 நாடுகளில் நடக்கும் இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஏ பிரிவில் இந்திய நேரப்படி நேற்று இரவு12.30 மணிக்கு இத்தாலியின் ரோம் நகரில் நடந்த போட்டியில் இத்தாலி -துருக்கி அணிகள் மோதின. முன்னதாக வண்ண வாண வேடிக்கையுடன் தொடக்க விழா நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மைதானத்தில் 25 சதவீதம் ரசிகர்கள் (16ஆயிரம் பேர்) மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே இத்தாலி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் கோல்கள் எதுவும் விழவில்லை. ஆட்டத்தின் 2வது பாதியில் துருக்கி வீரர் மேரி டெமிரல் சுயகோல் அடிக்க இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து 66வது நிமிடத்தில் இத்தாலியின் சிரோ இம்மொபைல் கோல் அடித்தார். 79வது நிமிடத்தில்  இத்தாலியின் லோரென்சோ இன்சைன் கோல் போட்டார். கடைசிவரை போராடியும் துருக்கியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. இன்று 3 போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு  பாகுவில் நடைபெறும் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள வேல்ஸ்-சுவிட்சர்லாந்து மோதுகின்றன. இரவு 9.30மணிக்கு கோபன்ஹேகன் நகரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள டென்மார்க்-பின்லாந்து அணிகளும் மோதுகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு  செயின்ட்பீட்டர்ஸ் பர்க்கில்  பி பிரிவில் பெல்ஜியம்-ரஷ்யாவும் மோதுகின்றன.

மூலக்கதை