விவசாயிகள் போராட்ட பகுதியில் பலாத்காரத்துக்கு ஆளான பெண் கொரோனாவால் பலி: முக்கிய குற்றவாளி அதிரடி கைது

தினகரன்  தினகரன்
விவசாயிகள் போராட்ட பகுதியில் பலாத்காரத்துக்கு ஆளான பெண் கொரோனாவால் பலி: முக்கிய குற்றவாளி அதிரடி கைது

புதுடெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டம் நடத்திவந்த பகுதியில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அரியானா - டெல்லி எல்லையான திக்ரி பகுதியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் திக்ரி எல்லையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஆர்வலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட பெண், பகதூர்கரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  இறந்தார். இவ்விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விவசாயிகள் போராட்ட களத்தில் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்ததால், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது. இந்த  வழக்கில் மேலும் சில ஆதாரங்களை திரட்டுவதற்காக விவசாயிகள் சங்க பிரதிநிதி யோகேந்திர யாதவ் உட்பட பலருக்கு  காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த சம்பவத்திற்கு சில விவசாய சங்கத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், டெல்லியில் வசிக்கும் அனில் மாலிக் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். கைது செய்யப்பட்ட பின்னர், அவர் மாலிக் பகதர்கரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மூன்று நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து டிஎஸ்பி பகதூர்கர் பவன் சர்மா கூறுகையில், ‘கைதான அனில் மாலிக் தவிர, மேலும் இரண்டு குற்றவாளிகள் பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தேடி வருகிறோம்’ என்றார்.

மூலக்கதை