மாரடைப்பால் இறந்ததாக ‘சர்டிபிகேட்’ கொடுத்த மருத்துவமனை; இளம்பெண் உடனான வீடியோவை காட்டி மிரட்டியதால் சாமியார் தற்கொலை: ஆசிரம சொத்துகளை கைப்பற்ற முயன்ற மருமகனின் சதி அம்பலம்

தினகரன்  தினகரன்
மாரடைப்பால் இறந்ததாக ‘சர்டிபிகேட்’ கொடுத்த மருத்துவமனை; இளம்பெண் உடனான வீடியோவை காட்டி மிரட்டியதால் சாமியார் தற்கொலை: ஆசிரம சொத்துகளை கைப்பற்ற முயன்ற மருமகனின் சதி அம்பலம்

ராஜ்கோட்: குஜராத்தில் இளம்பெண்ணுடன் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டியதால், சாமியார் தற்கொலை செய்து கொண்டார். இவ்விவகாரத்தில், மருமகன், மருந்துவனை நிர்வாகம் உள்ளிட்ட பலர் சிக்கியுள்ளனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் காக்தாடி அடுத்த பாட்டியா  பகுதியில் மஹந்த் ஜெயராம்தாஸ் பாபு என்ற சாமியார் ஆசிரமம் அமைத்து 17 ஆண்டுகளாக வசித்து  வந்தார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி  மஹந்த் ஜெயராம்தாஸ் பாபு திடீரென  தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இறந்தார். திடீர் மாரடைப்பால் சாமியார் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சாமியார் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆசிரமத்தில் இருந்தவர்கள் அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகார்கள் வந்தன. அதையடுத்து மஹந்த் ஜெயராம்தாஸ் பாபுவின்  மரணம் குறித்து குவாட்வா போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட  விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சாமியாரின் மரணம் இயற்கையானது அல்ல. அவர், தனது மருமகன்  உட்பட மூன்று நபர்களால் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார். சாமியாரிடம் இருந்து பணம் பறிப்பதற்காகவும், ஆசிரமத்தை கைப்பற்றவும் அவரது மருமகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு சதி திட்டம் தீட்டினார். அதன்படி இரண்டு இளம் பெண்களை ஆசிரமத்திற்கு வரவழைத்து சாமியாரிடம் அழைத்து சென்றார். கிட்டதிட்ட ஆறு முறை அந்த பெண்கள் சாமியாரை சந்தித்துள்ளனர். அப்போது, சாமியாருக்கு அந்த பெண்கள் தேனீர் கொடுப்பது போன்றும், அவருக்கு அருகில் நெருக்கமாக அமர்ந்திருக்கும் படியான வீடியோவை அவரது மருமகன் தயார் செய்தார். பின்னர், அந்த வீடியோவை சாமியாரிடம் காட்டி கடந்த 3 ஆண்டில் அவரை பிளாக்மெயில் செய்து ரூ .20 லட்சம் பறித்துள்ளார். இளம்பெண்களுடன் இருக்கும் வீடியோவை காட்டி, அவ்வப்போது சாமியாருக்கு அவரது மருமகனும் மற்றவர்களும் தொந்தரவு கொடுத்துவந்தனர். அதனால் மனமுடைந்த சாமியார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, 20  பக்க தற்கொலைக் குறிப்பு கடிதத்தை ஆசிரமத்தின் மாடி அறையில் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தின் அடிப்படையில் ஆசிரமத்தின் அறங்காவலர் ராம்ஜிபாய் ஜெஷபாய்  லிம்பாசியா குவாட்வா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த கடிதத்தில், காந்திகிராம் பகுதியில் வசிக்கும் மருமகன்  அல்பேஷ் சோலங்கி, அவரது உறவினர் ஹிடேஷ்  ஜாதவ் மற்றும் விக்ரம் தேவ் சோஹ்லா ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளார். மருமகன் அல்பேஷ் மற்றும் ஹிடேஷ் ஆகியோர் ஆசிரம  அறக்கட்டளையில் தங்களை நிரந்தர அறங்காவலர்களாக நியமிக்க கட்டாயப்படுத்தி உள்ளனர். அதற்கு அவர் மறுத்ததால்,  இளம்பெண்களை பயன்படுத்தி பாலியல் வீடியோவை உருவாக்கி, அதன் மூலம் அவரது சொத்தை அடையலாம் என்று திட்டமிட்டுள்ளனர். வீடியோவில் இருந்த இளம்பெண்ணிடம் விசாரித்த போது, சாமியார் அந்த பெண்ணை ஆசிரமத்தில் இரவில் தங்க சொன்னதாக கூறுகிறார். எதற்காக அந்தப் பெண்ணை ஆசிரமத்தில் சாமியார் தங்கச் சொன்னார் என்பது தெரியவில்லை. வீடியோவின் பெரும்பாலான பகுதியில், சாமியாருடன் அந்தப் பெண் பேசிக் கொண்டிருப்பது போன்றுதான் உள்ளது. சாமியாரின் தற்கொலை விவகாரத்தில், அறக்கட்டளையின் சில அறங்காவலர்களின் பங்கும் உள்ளதாக தெரியவருகிறது. இவ்விவகாரத்தில், தேவ் மருத்துவமனை நிர்வாகம், சாமியார் தற்கொலை செய்து கொண்டதை மறைத்து மாரடைப்பால் இறந்ததாக கூறி, அதற்கான இறப்புச் சான்றிதழை பெற்றுத் தந்துள்ளது. அதனால், டாக்டர் நிமாவத்தை விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இதுவரை 6 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சாமியாரின் இறப்பு விவகாரத்தில் 12 பேருக்கு தொடர்பு இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன’ என்றனர். ஆசிரமத்தின் சொத்தை அபகரிப்பதற்காக, சாமியாருடன் இளம்பெண்களை நெருங்கவிட்டு, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய மருமகன் உள்ளிட்டோர் தற்போது போலீஸ் வலையில் சிக்கியுள்ளதால், குஜராத்தில் இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை