வதந்தியால் மக்களிடையே குழப்பம்; தடுப்பூசி போடலைனா... ‘நோ ரேஷன்’ மத்திய பிரதேச பஞ்சாயத்து உத்தரவால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
வதந்தியால் மக்களிடையே குழப்பம்; தடுப்பூசி போடலைனா... ‘நோ ரேஷன்’ மத்திய பிரதேச பஞ்சாயத்து உத்தரவால் பரபரப்பு

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால், ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்ற அறிவிப்பால், தற்போது மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதில், இன்னும் சிலரிடையே குழப்பம் நிலவுகிறது. வதந்திகளின் காரணமாக, தடுப்பூசியை போட்டுக் கொள்வதை அவர்கள் தவிர்க்கிறார்கள். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் ஷிஹோடா அடுத்த ஷாஹ்புரா மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாததால், அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்த்து வந்தனர். இருந்தும், பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ‘தடுப்பூசி போடவில்லை என்றால் ரேஷன் பொருட்களை பெறமுடியாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும், பொது விநியோக கடைகளிலிருந்து (பிடிஎஸ்) ரேஷன் பொருட்களை சப்ளை செய்யக் கூடாது என்று விற்பனையாளருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, அரசின் எந்தவொரு நலத்திட்டங்களையும் பெறவேண்டுமானால், முதலில் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றை காட்ட வேண்டும். அதன்பின்னரே, அவர்களுக்கு நலஉதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறுகையில், ‘பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் வெளியிட்ட ஆணையை சிலர் அலட்சியம் காட்டி வந்தனர். அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்காததால், தடுப்பூசி போட்டுக் கொள்ள சம்மதித்தனர். தற்போது கிராமத்தின் மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இப்போது அருகிலுள்ள மற்ற கிராம பஞ்சாயத்துகளிலும், இதே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்க ஆலோசித்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்’ என்றனர்.

மூலக்கதை