பிரபலங்களின் வங்கி கணக்குகளை ‘ஹேக்’ செய்ய ‘ஜட்டி’க்குள் வைத்து 1,300 ‘சிம்’ கார்டு கடத்திய சீனர் கைது: வங்கதேசம் வழியாக மேற்குவங்கத்தில் நுழைந்த போது சிக்கினான்

தினகரன்  தினகரன்
பிரபலங்களின் வங்கி கணக்குகளை ‘ஹேக்’ செய்ய ‘ஜட்டி’க்குள் வைத்து 1,300 ‘சிம்’ கார்டு கடத்திய சீனர் கைது: வங்கதேசம் வழியாக மேற்குவங்கத்தில் நுழைந்த போது சிக்கினான்

கொல்கத்தா: வங்கதேசம் - மேற்குவங்க எல்லையில் கைது செய்யப்பட்ட சீனா், தனது நாட்டுக்கு 1,300 இந்திய சிம் காா்டுகளை நிதி மோசடிக்கு பயன்படுத்த தனது உள்ளாடைக்குள் வைத்து கடத்திச் சென்றதாக எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சோ்ந்தவர் ஹான் ஜுன்வே (35). இவர், மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லையை கடந்த சில நாட்களுக்கு முன் சட்டவிரோதமாக கடக்க முயன்றார். அப்போது எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த பிஎஸ்எப் படையினா் ஹான் ஜூன்வேவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பிஎஸ்எப் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவை சேர்ந்த ஹான் ஜுன்வேயிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளில் 1,300 இந்திய சிம் காா்டுகளை தனது உள்ளாடைகளில் மறைத்து சீனாவுக்கு கடத்திச் சென்றுள்ளார். போலி ஆவணங்களை காட்டி, இந்தியாவில் இருந்து சிம் காா்டுகளை வாங்கியுள்ளார். அதன்மூலம் வங்கிக் கணக்குகளை முடக்கவும், நிதி மோசடியில் ஈடுபடவும் பயன்படுத்தப்பட்டு அந்த சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. கடத்தப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் பறித்துள்ளார். அவருடன் வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சன் ஜியாங் என்ற நபரை உத்தர பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவினர் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்திய விசாவை பெற முடியாத நிலை ஹான் ஜூன்வேவுக்கு ஏற்பட்டதால், இந்திய-வங்கதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளார். இந்தியாவுக்கு ஏற்கெனவே 4 முறை வந்துள்ள அவருக்கு டெல்லி அருகே குர்கிராமில் சொந்தமாக ஓட்டல் உள்ளது. அவரைப் பற்றிய கூடுதல் தகவல்களை பெற இன்டா்போல் (சா்வதேச காவல்துறை) அதிகாரிகள் மூலம் ப்ளூ நோட்டீஸ் வெளியிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அவரிடம் சந்தேகத்துக்குரிய மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் மேற்குவங்க காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிஎஸ்எப் அதிகாரிகள் கூறுகையில், ‘மால்டா மாவட்டம் கலியாசக் காவல் நிலையத்தில் ஹான் ஜூன்வே உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஹான் ஜுன்வே மற்றும் அவரது மனைவிக்கும் தொடர்பு உள்ளது. ஏற்கனவே, 2010ம் ஆண்டில் முதல் முறையாக ஐதராபாத்திற்கு ஹான் ஜுன்வே வந்துள்ளார். டெல்லி அடுத்த குர்கிராமிற்கு 2019ம் ஆண்டிற்குப் பிறகு மூன்று முறை வந்துள்ளார். நான்கு முறை அவர் வணிக செய்வது தொடர்பாக இந்திய விசாவுடன் வந்திருந்தார். தற்போது வங்கதேச விசா மூலம் ஜூன் 2ம் தேதி டாக்காவை அடைந்ததார். அங்கிருந்து மேற்கு வங்கத்தின் மால்டா பகுதி ஆற்றங்கரை வழியாக இந்தியாவுக்கு ஊடுருவ முயன்ற போது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, பாஸ்போர்ட், ஆப்பிள் லேப்டாப், இரண்டு ஐபோன் மொபைல், ஒரு வங்கதேச சிம் கார்டு, ஒரு இந்திய சிம் கார்டு, இரண்டு சீன சிம் கார்டு, 2 பென் டிரைவ்கள், மூன்று பேட்டரிகள், இரண்டு சிறிய டார்ச்கள், 5 பண பரிவர்த்தனை இயந்திரங்கள், இரண்டு ஏடிஎம் கார்டுகள், அமெரிக்க டாலர்கள், வங்கதேச தக்கா, இந்திய நாணயங்கள் மீட்கப்பட்டன. சீன உளவு வேலை பார்ப்பதற்காக இந்தியாவுக்குள் ஊடுருவினாரா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றனர். இந்தியாவுக்கு ஏற்கெனவே 4 முறை வந்துள்ள ஹான் ஜுன்வேவுக்கு டெல்லி அருகே குர்கிராமில் சொந்தமாக ஓட்டல் உள்ளது. அவரைப்  பற்றிய கூடுதல் தகவல்களை பெற இன்டா்போல் (சா்வதேச காவல்துறை) அதிகாரிகள்  மூலம் ப்ளூ நோட்டீஸ் வெளியிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மூலக்கதை