பாகிஸ்தான் கழுதைகளுக்கு சீனாவில் மவுசு: ஆண்டுக்கு 80 ஆயிரம் கழுதை ஏற்றுமதி

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் கழுதைகளுக்கு சீனாவில் மவுசு: ஆண்டுக்கு 80 ஆயிரம் கழுதை ஏற்றுமதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டு கழுதைகளுக்கு சீனாவில் மவுசு அதிகமாக உள்ளதால்,  ஆண்டுக்கு 80 ஆயிரம் கழுதைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. சீனாவிற்கு மிக நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் கழுதைகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவை இறைச்சி மற்றும் பல விஷயங்களுக்குப்  பயன்படுத்தப்படுகின்றன. சீனாவில் கழுதையின் தோலில் இருந்து எடுக்கப்படும் ஜெலட்டின் மூலமாக, பலவகை மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் பாகிஸ்தான் கழுதைகளுக்கு சீன நிறுவனங்கள் மத்தியில் மவுசு அதிகம். கழுதையை கொள்முதல் செய்வதில் அதிகளவில் முதலீடு செய்கின்றன. உலகளவில்,  அதிகளவில் கழுதைகள் கொண்ட மூன்றாவது பெரிய நாடாக பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானில்  ஒரு கழுதையின் தோல் 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசும் கழுதை வளர்ப்பில் அதிகளவில் முதலீடு செய்கிறது. இது மட்டுமல்லாமல், கழுதை வளர்ப்பு மற்றும் சிகிச்சைக்காக பாகிஸ்தானில் தனி  மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான கடந்த மூன்று ஆண்டு ஆட்சி காலத்தில், கழுதைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் வரை அதிகரித்துள்ளது. மொத்த கழுதைகளின் எண்ணிக்கை 56 லட்சத்தை எட்டியுள்ளது. ஒட்டகம், குதிரை உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளாக பெரிய அளவில் மாற்றமின்றி உள்ளதாக, அந்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

மூலக்கதை