கோட் சூட்டுடன் ரயில் நிலையத்தில் திரிந்த 16 போலி டிக்கெட் பரிசோதகர் அட்டை பறிமுதல்: 3 குற்றவாளிகளை கைது செய்த போலீசார்

தினகரன்  தினகரன்
கோட் சூட்டுடன் ரயில் நிலையத்தில் திரிந்த 16 போலி டிக்கெட் பரிசோதகர் அட்டை பறிமுதல்: 3 குற்றவாளிகளை கைது செய்த போலீசார்

கான்பூர்: கான்பூர் ரயில் நிலையத்தில் கோட் சூட்டு போட்டு திரிந்த 16 போலி டிக்கெட் பரிசோதகர்களின் அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் ரயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் இந்திய ரயில்வே வாரியத்திற்கு சென்றது. அதையடுத்து ஆர்.பி.எப் மற்றும் ஜிஆர்பி போலீசார் இணைந்து ரயில் நிலையத்தில் சுற்றித்திரியும் போலி டிக்கெட் பரிசோதகர்களை மடக்கி பிடித்தனர். கிட்டதிட்ட 16 போலி டிக்கெட் பரிசோதகர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து, 3 குற்றவாளிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் போலி ரயில் அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து ரயில்வே போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘தானியங்கி படிக்கட்டுகளுக்கு அருகே தபால் பணியாளர்கள் மற்றும் டிக்கெட் சோதனை ஊழியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் தினேஷ் என்பவன் வெள்ளை சட்டை அணிந்தவாறு, பயணிகளின் டிக்கெட்டுகளை தணிக்கை செய்து கொண்டிருந்தான். அவனது கழுத்தில் போலி அடையாள அட்டை இருந்தது. சந்தேகத்தின் பேரில் அவனை பிடித்து விசாரித்தபோது, ​அவன் ​தன்னை ரயில்வே ஊழியர் என்று கூறினான். பின்னர், தன்னுடைய செல்போனில் இருந்த டிக்கெட் பரிசோதகர் என்பதற்கான ஒரிஜினல் அடையாள அட்டையை காட்டினான். அதில், மூத்த பொறியாளர் அலுவலகத்தின் முத்திரை இருந்தது. உடனடியாக அவனை, ரயில்வே டிக்கெட் பரிசோதகர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அவனது ஆவணங்கள்  சரிபார்க்கப்பட்டன. அதில், தினேஷ் என்ற  ஊழியர் ரயில்வேயில் பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவனிடம் கடுமையான முறையில் விசாரணை நடத்தியதில், போலி அடையாள அட்டை மற்றும் போலி நியமனக் கடிதங்களுடன் பலர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டது. தற்போது, 16 போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், வேலையில்லா இளைஞர்களிடம் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரை ஏமாற்றி ரூ. 15 லட்சம் வரை வசூல் செய்து மோசடி செய்துள்ளனர்’ என்றனர்.

மூலக்கதை