அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் 16ம் தேதி பேச்சு!: ஜெனீவாவில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

தினகரன்  தினகரன்
அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் 16ம் தேதி பேச்சு!: ஜெனீவாவில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

ஜெனீவா: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள சுஸர்லாந்தின் ஜெனீவா நகரத்தில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா நகரத்தில் உள்ள 18ம் நூற்றாண்டு அரண்மனையான மேனர் இல்லத்தில் வரும் புதன்கிழமை ஜோ பைடனும், புதினும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து வரும் செவ்வாய்கிழமை முதல் வியாழன் வரை அப்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிப்பது குறித்து சுவிஸ் தேசிய காவல் படையினர் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தை நடைபெறும் கட்டட வளாகத்தின் உள்ளும், வெளியிலும் 3,000 காவல்துறையை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் வருகையின் போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக 4 நாட்களுக்கு முன்னதாகவே சுவிஸ் ராணுவம், ஜெனீவா முழுவதும் உள்ள ஹோட்டல் மற்றும் தங்கும் இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. வரும் 16ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய அதிபர் புதினிடம் ஆயுத குறைப்பு, மனித உரிமை மீறல்கள், சைபர் தாக்குதல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் பைடன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெனீவா நகர காவல் அதிகாரி மோனிகா பான்ஃபன்டி தெரிவித்ததாவது, பாதுகாப்பு பணிகளில் 2 ஆயிரம் காவல்துறையினரை களமிறக்க முடிவு செய்துள்ளோம். இதுதவிர ஆயிரம் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக தலைவர்களின் பாதுகாப்புக்கு எந்த குறைபாடும் இருக்காது என்று குறிப்பிட்டார்.

மூலக்கதை