‘நம்பர்–1’ பவுலர் ஷமி: அகார்கர் பாராட்டு | ஜூன் 08, 2021

தினமலர்  தினமலர்
‘நம்பர்–1’ பவுலர் ஷமி: அகார்கர் பாராட்டு | ஜூன் 08, 2021

மும்பை: ‘‘இந்தியாவின் ‘நம்பர்–1’ பவுலர் முகமது ஷமி,’’ என, அகார்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18–22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இப்போட்டிக்கான இந்திய லெவன் அணியில் வேகப்பந்துவீச்சாளர்களான இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் கூறியது: உலக டெஸ்ட் பைனலில் இந்தியா சார்பில் முகமது ஷமி அதிக விக்கெட் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கின்றேன். பும்ராவின் எழுச்சி விரைவாக உள்ளது. இருப்பினும் என்னைப் பொறுத்தவரை முகமது ஷமி தான் இந்தியாவின் ‘நம்பர்–1’ பவுலர். குறிப்பாக டெஸ்ட் போட்டியில்.

உலக டெஸ்ட் பைனலில் வெற்றி பெறும் அணியை கணிப்பது கடினம். இருப்பினும் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகம். இங்கிலாந்து மண்ணில் 2வது முறையாக டெஸ்டில் களமிறங்கும் கோஹ்லி தான் இப்போட்டியில் அதிக ரன் எடுப்பார்.

இவ்வாறு அகார்கர் கூறினார்.

உலக டெஸ்ட் பைனல் குறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் கூறுகையில், ‘‘இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற விரும்புகிறேன். பும்ரா, இஷாந்த், ஷமி என வேகப்பந்துவீச்சு பலமாக உள்ளது. இதில் ஷமி வெற்றிக்கு முக்கிய பங்குவகிப்பார். இவர், உலகின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர்,’’ என்றார்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ‘ஆல்–ரவுண்டர்’ இர்பான் பதான் கூறுகையில், ‘‘இப்போட்டியில் இந்தியாவை விட நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகம். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அதிக ரன் எடுப்பார். நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட், இந்தியாவின் ஷமிக்கு இடையே அதிக விக்கெட் கைப்பற்றும் போட்டி நிலவும்,’’ என்றார்.

மூலக்கதை