மீண்டு வருவார் ரகானே: சொல்கிறார் எம்.எஸ்.கே. பிரசாத் | ஜூன் 08, 2021

தினமலர்  தினமலர்
மீண்டு வருவார் ரகானே: சொல்கிறார் எம்.எஸ்.கே. பிரசாத் | ஜூன் 08, 2021

புதுடில்லி: ‘‘இந்தியாவின் ரகானே வலிமையுடன் மீண்டு வருவார்,’’ என, எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜின்கியா ரகானே 33. இதுவரை 73 டெஸ்ட் (4583 ரன்), 90 ஒருநாள் (2962), 20 சர்வதேச ‘டுவென்டி–20’ (375) போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் சதம் கடந்த இவர், அதன்பின் விளையாடிய 6 டெஸ்டில், ஒரு அரைசதம் மட்டும் அடித்துள்ளார். இதனால் இவரது ‘பார்ம்’ குறித்து கேள்வி எழுகிறது. இருப்பினும் இவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷில் தொடருக்கான அதிக ரன் (1095 ரன், 17 டெஸ்ட்) குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தற்போது இவர், உலக டெஸ்ட் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறியது: ரகானே சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளார். அணிக்கு தேவைப்படும் நேரங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி தேடித்தந்துள்ளார் என்பதை மறந்துவிடக் கூடாது. கோஹ்லி சோபிக்காத போட்டிகளில் இவர் கைகொடுத்துள்ளார். தவிர, ஆஸ்திரேலிய மண்ணில் அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பை பெற்றுத்தந்துள்ளார். சொந்த மண்ணை விட அன்னிய மண்ணில் இவரது செயல்பாடு சிறப்பாக உள்ளது. இவர், வலிமையுடன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே  இவரது ‘பார்ம்’ குறித்து சந்தேகம் எழுப்பி தேவையில்லாத நெருக்கடி கொடுக்கக் கூடாது.

இவ்வாறு பிரசாத் கூறினார்.

 

மூலக்கதை