இந்திய வீரர்களுக்கு ‘ஜாலி’ * இருபது நாள் லீவு | ஜூன் 08, 2021

தினமலர்  தினமலர்
இந்திய வீரர்களுக்கு ‘ஜாலி’ * இருபது நாள் லீவு | ஜூன் 08, 2021

லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு மூன்று வாரம் விடுமுறை வழங்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள், வரும் ஜூன் 18–22 ல் சவுத்தாம்ப்டனில் நடக்கவுள்ள பைனலில் மோதவுள்ளன.

இதன் பின் இந்திய அணி 42 நாட்கள் கழித்து இங்கிலாந்துக்கு எதிராக ஆக. 4 முதல் செப். 14 வரை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. போட்டிகள் இல்லாமல் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள், குடும்பத்தினர் இருக்க வேண்டும்.

இதனால் ஏற்படும் மன சோர்வை தவிர்க்கும் வகையில் 20 நாட்கள் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு அதிகாரி ஒருவர் கூறியது:

ஆஸ்திரேலிய தொடரின் போது நீண்ட நாட்களாக கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தது மிக கடினமாக இருந்தது. இது எல்லோருக்கும் தெரியும். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெஸ்ட் தொடருக்கு இடையே 6 வாரங்கள் இடைவெளி உள்ளன. இதனால் வீரர்கள் நலனை முன்னிட்டு, அனைவருக்கும் விடுமுறை தர உள்ளோம்.

இதில் நண்பர்கள், குடும்பத்தினரை சந்திக்கலாம். வீரர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். நாங்கள் தலையிட மாட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை