அப்டி சொல்லாதடா மனசெல்லாம் வலிக்கிறது... மஞ்ச்ரேக்கருக்கு அஷ்வின் பதிலடி | ஜூன் 08, 2021

தினமலர்  தினமலர்
அப்டி சொல்லாதடா மனசெல்லாம் வலிக்கிறது... மஞ்ச்ரேக்கருக்கு அஷ்வின் பதிலடி | ஜூன் 08, 2021

மும்பை: பிறரை குறை சொல்லியே புகழ் பெற துடிக்கும் மஞ்ச்ரேக்கருக்கு தரமான ‘மீம்’ மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார் அஷ்வின். 

தமிழகத்தின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக  400 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர். பேட்டிங்கிலும் கைகொடுக்கக் கூடியவர்.  இவரை வீணாக குறைத்து மதிப்பிட்ட இந்திய முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,‘‘அனைத்து காலத்துக்கும் சிறந்தவர்(ஆல் டைம் கிரேட்) என்பது  ஒரு கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும்  உயரிய அங்கீகாரம். எனது ‘ஆல் டைம் கிரேட்’ பட்டியலில் பிராட்மேன், சோபர்ஸ், கவாஸ்கர், சச்சின், கோலிக்கு இடம் உண்டு. இதில் அஷ்வினுக்கு  இடம் அளிக்க முடியாது. ஏனெனில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் இவர் ஒருமுறை கூட ஐந்து விக்கெட் வீழ்த்தியது இல்லை. இவரால் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே சாதிக்க முடிகிறது,’’ என்றார். 

முன்பு இந்தியாவின் ஜடேஜாவை ‘சுமாரான வீரர்’ என விமர்சித்து வாங்கிக் கட்டிக் கொண்டவர் தான் மஞ்ச்ரேக்கர். தேவையில்லாமல் அஷ்வினையும் வம்புக்கு இழுக்க, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சாப்பல் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

நேற்று அஷ்வினும் தன்பங்கிற்கு  சவுக்கடி கொடுத்துள்ளார். மஞ்ரேக்கரின் கருத்து மனதை புண்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். தனது ‘டுவிட்டரில்’, அந்நியன் படத்தின் பிரபல வசனமான ‘அப்டி சொல்லாதடா சாரி... மனசெல்லாம் வலிக்கிறது’ என்ற ‘மீம்’ பதிவிட்டு நகைச்சுவையாக  பதிலடி கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த ‘மீம்’ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

மூலக்கதை