ஜடேஜா ‘நம்பர்–2’: ஐ.சி.சி., தரவரிசையில் | ஜூன் 09, 2021

தினமலர்  தினமலர்
ஜடேஜா ‘நம்பர்–2’: ஐ.சி.சி., தரவரிசையில் | ஜூன் 09, 2021

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா 2வது இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 386 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து ‘நம்பர்–2’ இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் (385 புள்ளி) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் விண்டீசின் ஜேசன் ஹோல்டர் (423) நீடிக்கிறார். தமிழகத்தின் அஷ்வின், 353 புள்ளிகளுடன் 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 814 புள்ளிகளுடன் 5வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பன்ட், தலா 747 புள்ளிகளுடன் 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். முதலிடத்தை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (895) தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

பவுலர்களுக்கான தரவரிசையில் தமிழக ‘சுழல்’ வீரர் அஷ்வின், 850 புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடர்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் (908) நீடிக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் 5 விக்கெட் சாய்த்த நியூசிலாந்தின் டிம் சவுத்தீ, 838 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறினார்.

மூலக்கதை