வில்லியம்சன் விலகல் | ஜூன் 09, 2021

தினமலர்  தினமலர்
வில்லியம்சன் விலகல் | ஜூன் 09, 2021

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முழங்கை காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விலகினார்.

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 18–22, இடம்: சவுத்தாம்ப்டன்) விளையாடுகிறது. இதற்கு தயாராகும் விதமாக இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லண்டன், லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

இன்று, பர்மிங்காமில் இரண்டாவது டெஸ்ட் துவங்குகிறது. இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகினார். இவரது இடது முழங்கையில் லேசாக வலி, எரிச்சல் இருக்கிறது. அடுத்து உலக டெஸ்ட் பைனலில் விளையாட வேண்டியிருப்பதால், காயம் பெரிதாகாமல் பாதுகாத்துக் கொள்ள இப்போட்டியில் இருந்து விலகினார்.

வில்லியம்சன் விலகியதால், துணை கேப்டன் டாம் லதாம் அணியை வழிநடத்த உள்ளார். மூன்றாவது இடத்தில் களமிறங்கும் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக வில் யங் 28, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை 2 டெஸ்டில் விளையாடிய வில் யங், இங்கிலாந்தில் நடக்கும் ‘கவுன்டி’ சாம்பியன்ஷிப் தொடரில் துர்ஹாம் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில், 2 முறை சதமடித்திருந்தார்.

இதுகுறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறுகையில், ‘‘இரண்டாவது டெஸ்டில் இருந்து வில்லியம்சன் விலகுவது எளிதான முடிவல்ல. ஆனால் இது சரியான முடிவாக கருதுகிறேன். இவரது முழங்கையில் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஓய்வு, மறுவாழ்வு பயிற்சி, இவர் காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வர உதவும். உலக டெஸ்ட் பைனலுக்கு முன், குணமடைந்துவிடுவார்,’’ என்றார்.

மூலக்கதை